சிஏஏ.வுக்கு எதிரான தீர்மானம் பற்றி விவாதம் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு

தினகரன்  தினகரன்
சிஏஏ.வுக்கு எதிரான தீர்மானம் பற்றி விவாதம் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு

லண்டன்: இந்தியாவில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, ஐரோப்பிய யூனியன் குழுக்கள் கொண்டு வந்துள்ள தீர்மானங்கள் மீது, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி ஓட்டெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு(சிஏஏ) எதிராக ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக உள்ள எஸ் அண்ட் டி (சமதர்மவாதிகள் மற்றும் ஜனநாயக கட்சியினர் கூட்டணி), ஐரோப்பிய மக்கள் கட்சி (பிபிஇ), ஐரோப்பிய பழமைவாத மற்றும் சீர்திருத்தக் குழு(இசிஆர்), ஐரோப்பிய ஐக்கிய இடது சாரி, ஐரோப்பிய புதுப்பிப்பு குழு, கிரீன்ஸ் மற்றும் ஐரோப்பிய குழு ஆகியவை தீர்மானம் கொண்டு வந்துள்ளன.  இதில், காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து மற்றும் சிஏஏ கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘‘இந்திய குடியுரிமை முறையில் இது அபாயகரமான மாற்றம். உலகிலேயே நாடில்லா மக்கள் இந்தியாவில் அதிகரிப்பர். சிஏஏ போராட்டக்காரர்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு பதில் அவர்களை அச்சுறுத்துவதில் அரசுத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்’’ என தீர்மானத்தில் ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.எஸ் அண்ட் டி கூட்டணி கட்சி தீர்மானத்தில், ‘‘அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் கொள்கையில் இந்தியா மதம் என்ற பிரிவை இணைத்துள்ளது’’ என தெரிவித்துள்ளது. ஐரோப்பிய மக்கள் கட்சி கூறுகையில், ‘‘குடியுரிமை திருத்த சட்டம் அதனால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள், சர்வதேச அளவில் இந்தியாவின் கவுரவத்தையும், உள்நாட்டு நிலைத்தன்மையையும் பாதிக்கலாம்’’ என கவலை தெரிவித்துள்ளது. இந்த தீர்மானங்கள் குறித்து பெல்ஜியம் நாட்டின் பிரஸ்செல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நாளை விவாதம் நடத்தி நாளை மறுதினம் ஓட்டெடுப்பு நடத்தப்படவுள்ளது. இங்கு இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால், அது மத்திய அரசுக்கும், இந்திய நாடளுமன்றத்துக்கும், ஐரோப்பிய ஆணைய தலைவர்களுக்கும் முறைப்படி அனுப்பி வைக்கப்படும். இதனால் இந்தியாவுக்கு பொருளாதார தடை விதிக்க வாய்ப்புள்ளன. இந்த நடவடிக்கை குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘‘ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட சட்டங்கள் மற்றும் அதிகாரம் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றம் கேள்வி கேட்கக் கூடாது, நடவடிக்கை எடுக்கக் கூடாது. சிஏஏ இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதற்கான சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்தி ஜனநாயக முறைப்படி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்கவில்லை. இந்தியாவின் அண்டைநாடுகளில் அடக்குமுறைக்கு ஆளான சிறுபான்மையினரை பாதுகாக்க கொண்டு வரப்பட்டது’’ என்றன. இதற்கிடையே, ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘‘சிஏஏ இந்தியாவின் உள்விவகாரம் என்று பிரான்ஸ் கருதுகிறது. ஆனால், ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளின் சுயாட்சி அமைப்பான ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தின் தீர்மானம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது’’ என்று கூறியுள்ளன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஐேராப்பிய யூனியன் நாடாளுமன்றத்துக்கு, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா கடிதம் எழுதி யுள்ளார்.இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட அதிகாரம் இல்லை டெல்லியில் நேற்று நடந்த ஒரு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறுகையில், ‘‘இந்திய அரசு மற்றும் நாடாளுமன்றம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெளிநாட்டு அமைப்புகள் தலையிடும் போக்கு கவலையளிக்கிறது. இதுபோன்ற முயற்சிகள் நியாயமற்றது. இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதில் இருந்து அவர்கள் விலகியிருக்க வேண்டும். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநபர் தலையீட்டுக்கு அதிகாரம் இல்லை’’ என்றார்.‘சர்வதேச விவகாரம் ஆக்கிவிட்டது மத்திய அரசு’காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் இது குறித்து கூறுகையில், ‘‘சிஏஏ குறித்து ஐரோப்பிய யூனியன் விவாதம் நடத்துகிறது. குடியுரிமை சட்டத்தை இந்தியா சர்வதேச விவகாரமாக்கிவிட்டது’’ என்று குற்றஞ்சாட்டினார்.பெரும்பான்மையுடன் நிறைவேறும்?ஐரோப்பிய யூனியனில் பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து, டென்மார்க், ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா என மொத்தம் 28 நாடுகள் உள்ளன. ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் மொத்தம் 751 எம்.பி.க்கள் உள்ளனர். சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்துள்ள 6 குழுக்களில் 626 எம்.பி.க்கள் வரை உள்ளனர். 

மூலக்கதை