சரக்கு ரயில் வசூல் அபாரம் பயணிகள் ரயில்கள் மூலம் டிக்கெட் வருவாய் சரிவு : ஆர்டிஐ மூலம் தகவல்

தினகரன்  தினகரன்
சரக்கு ரயில் வசூல் அபாரம் பயணிகள் ரயில்கள் மூலம் டிக்கெட் வருவாய் சரிவு : ஆர்டிஐ மூலம் தகவல்

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில், ரயில்வேயில் பயணிகள் கட்டணம் மூலம் வருவாய் 400 கோடி சரிந்துள்ளது. ஆனால், சரக்கு ரயில்கள் மூலம் வருவாய் 2,800 கோடி அதிகரித்துள்ளது. ரயில்வே நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறி வரும் மத்திய அரசு, இத்துறையில் வருவாயை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதோடு தனியார் மயம் ஆக்குவதிலும் தீவிரமாக உள்ளது. இந்நிலையில், ரயில்வே வருவாய் விவரங்களை சமர்ப்பிக்குமாறு, மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கோரியிருந்தார். இதற்கு ரயில்வே அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரயில்வேக்கு பயணிகள் கட்டணம் மூலம் 13,398.92 கோடி கிடைத்துள்ளது. இது ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 13,243.81 கோடியாக சரிந்தது. அக்டோபர் - டிசம்பர் 3வது காலாண்டில், 2வது காலாண்டை விட 400 கோடி சரிந்து 12,844.37 கோடியாக இருந்தது. பயணிகள் ரயில்களில் வருவாய் சரிந்தாலும், சரக்கு ரயில் போக்குவரத்து மூலம் வருவாய் 3ம் காலாண்டில் அபாரமாக உயர்ந்துள்ளது. அதாவது, நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் - ஜூன் முதல் காலாண்டில் வருவாய் 29,066.92 கோடியாக இருந்தது. ஜூலை - செப்டம்பர் 2வது காலாண்டில் வருவாய் 25,165.13 கோடியாக சரிந்தது. இருப்பினும், அக்டோபர் - டிசம்பர் 3வது காலாண்டில், 2வது காலாண்டை விட 2,800 கோடி உயர்ந்து 28,032.80 கோடி ஈட்டப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

மூலக்கதை