சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி எண்ணிக்கை 80ஆக உயர்வு...2,744 பேர் பாதிப்பு...இறைச்சிக்கு தடை

தினகரன்  தினகரன்
சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி எண்ணிக்கை 80ஆக உயர்வு...2,744 பேர் பாதிப்பு...இறைச்சிக்கு தடை

பீஜிங்: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் பலி எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் வுகான் நகரில் சட்ட விரோதமாக விற்கப்படும் சுகாதாரமற்ற இறைச்சியில் இருந்து கொரோனா  வைரஸ் பரவியது. சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற சீன நகரங்களில் மட்டுமின்றி அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது.  இதனால், வுகான் உள்ளிட்ட 18 நகரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பஸ், ரயில், விமானம் என அனைத்து போக்குவரத்துக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, கொரோனா வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 80 ஆக  உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 2,744-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய் வேகமாக பரவி வருவதால் மேலும் 1,300 படுக்கை  வசதி கொண்ட 2வது  சிறப்பு மருத்துவமனை அடுத்த 15 நாட்களில்  கட்டி முடிக்க, சீன அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கட்டுப்படுத்த முடியவில்லை: சீன அதிபர் கைவிரிப்பு: இந்நிலையில், சீன அதிபர் ஜீ ஜின்பிங் நேற்று கூறுகையில், ``சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மிகவும் அசாதாரணமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை. அரசு மிக   துரிதமாக முடிந்த உதவிகளை செய்து வருகிறது. பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே இடத்தில் சிகிச்சை அளிக்க இரண்டு சிறப்பு மருத்துவமனைகள் விரைவில் கட்டப்பட்டு வருகின்றன.இந்த வைரஸ் எப்படி உருவானது என்று மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ராணுவ மருத்துவர்களும் நோயாளிகளை கவனித்து வருகின்றனர். தற்போது உறுதியாக சொல்லக் கூடிய ஒன்று, இந்த வைரஸ் பரவுவதை அரசால் தடுக்க   முடியவில்லை. இதை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை,’ என்று கூறியுள்ளார். இறைச்சிக்கு தடைசீன விவசாயத் துறை அமைச்சகம், வர்த்தக ஒழுங்குமுறைக்கான மாநில நிர்வாகம், தேசிய வனவியல் நிர்வாகம் ஆகியவை இணைந்து நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில், `வர்த்தக நிறுவனங்கள், சந்தைகள், உணவகங்கள், ஓட்டல்கள்,   ஆன்லைனில் இறைச்சி விற்பனை செய்யும் நிறுவனங்கள் உள்பட அனைத்து இறைச்சி விற்பனை மையங்களுக்கும், இறைச்சி விற்க தற்காலிக தடை விதிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இறைச்சி உண்பதை தவிருங்கள். நல்ல   ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள்,’ என்று கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை