குளத்துக்குள் ரோடா? கிராம மக்கள் எதிர்ப்பு : முதல்வருக்கு புகார் மனு

தினமலர்  தினமலர்
குளத்துக்குள் ரோடா? கிராம மக்கள் எதிர்ப்பு : முதல்வருக்கு புகார் மனு

அவிநாசி;அவிநாசி அருகே, குளத்துக்குள் தார் ரோடு போடும் பணியை நிறுத்த கோரி, தமிழக முதல்வருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து அவிநாசி, நடுவச்சேரியைச் சேர்ந்த பொதுமக்கள், முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனு விவரம்:அவிநாசி அடுத்த நடுவச்சேரியில், ஈஸ்வரன் கோவில் அருகே, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளம் உள்ளது. மழைக்காலத்தில், தண்ணீர் தேங்குவதால், அருகிலுள்ள, பல கிராமங்களிலுள்ள கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். மேலும், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில், இந்த குளமும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த குளத்துக்குள் ஒரு மண் பாதை பயன்பாட்டில் உள்ளது. தற்போது, அதனை தார் ரோடாக மாற்றும் பணி நடந்து வருகிறது. எந்த அடிப்படையில் பொதுப்பணி துறையின் குளத்தினுள் தார் ரோடு அமைக்க அனுமதிக்கப்பட்டது என தெரியவில்லை.குளத்துக்கு தண்ணீர் வரும் போது, இந்த ரோடு சேதமாகும் அல்லது, குளத்துக்கு தண்ணீர் நிரம்புவது தடைப்படும்.
நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து ரோடு அமைப்பது எதிர்காலத்தில் தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் கூறியதாவது:சேவூர் அடுத்த அசநல்லிபாளையத்தில் இது போல் குளத்துக்குள் பாதை அமைத்து பெரும் இடையூறு ஏற்பட்டது. தற்போது அதிகாரிகள் இந்த குளத்திலும் ரோடு போடுகின்றனர். மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

மூலக்கதை