14 கோடி விவசாய குடும்பத்தினருக்கு ரூ.6,000 வருவாய் உறுதியாகியுள்ளது: குடியரசு தினவிழாவையொட்டி ஜனாதிபதி உரை

தினகரன்  தினகரன்
14 கோடி விவசாய குடும்பத்தினருக்கு ரூ.6,000 வருவாய் உறுதியாகியுள்ளது: குடியரசு தினவிழாவையொட்டி ஜனாதிபதி உரை

புதுடெல்லி: நாட்டின் 71வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றியதாவது: ஜனநாயக நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் அரசியலமைப்பு சட்டமானது பல்வேறு உரிமைகளை வழங்குகிறது. நாட்டின் மேம்பாட்டுக்கு உள்நாட்டு பாதுகாப்பு மிக முக்கியமானது. எனவே அரசு உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்த  பல்வேறு உறுதியான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். நாட்டின் ஒற்றுமைக்கு ஆயுதப்படை வீரர்கள் மற்றும் துணை ராணுவப்படையினர் ஆற்றிய பங்கு அளப்பறியது. அதை ஒருபோதும் மறக்க முடியாது. இந்திய விண்வெணி ஆராய்ச்சி மையம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தப்போவதை நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.  தூய்மை இந்தியா திட்டம் குறுகியக் காலத்தில்  வெற்றி பெற்றுள்ளது. சமையல் கேஸ் சிலிண்டருக்கு மானியம் வழங்கும் திட்டம், டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்வது ஆகிய அரசு திட்டங்களை பொதுமக்கள் தங்கள் திட்டமாக கருதி வெற்றி பெறச்செய்துள்ளனர். பிரதமரின் விவசாயிகள் கவுரவக் கொடை வாயிலாக 14 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பத்தினருக்கு ஆண்டொன்றுக்கு 6000 ரூபாய் குறைந்தபட்ச வருமானம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.  இதன் வாயிலாக நமக்கெல்லாம்  அன்னம் படைப்போர், கவுரவமாக வாழ உதவி கிடைக்கிறது. நீர்பாதுகாப்பு திட்டம் விரைவில் புகழ்பெற்ற இயக்கமாக உருவெடுக்கும். ஜம்மு காஷ்மீர், லடாக், வடகிழக்கு மாநிலங்கள் என நாட்டின் எந்த ஒருபகுதியும் மேம்பாடு அடைய அரசு  உறுதிபூண்டுள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற பின் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சியடைய தொடங்கியுள்ளன. இவ்வாறு அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை சிலர் உணரவில்லைபுதுடெல்லி: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் நேற்று நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் ,  ``நாட்டில் தற்போதும் கூட, சில வாக்காளர்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணரவில்லை. உலகில் உள்ள பல்வேறு ஜனநாயக நாடுகளில், தங்களது வாக்களிக்கும் உரிமையை பெற மக்கள் தெருக்களில் இறங்கி போராட வேண்டியுள்ளது.  ஆனால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள், 18 வயது பூர்த்தியான ஒவ்வொரு இந்தியருக்கும், எவ்வித பாரபட்சமும் இல்லாமல், விலைமதிப்பற்ற வாக்களிக்கும் உரிமையை வழங்கி உள்ளனர். அந்த ஜனநாயக கடமையை  வாக்காளர்கள் பெரியளவில் பயன்படுத்தி உள்ளனர்’’ என்று கூறினார்.

மூலக்கதை