வியாபாரிகள் கூட்டணியை உடைக்க முடியவில்லை: நாமக்கல் முட்டை விலை நிர்ணயத்தில் தொடரும் குளறுபடி

தினகரன்  தினகரன்
வியாபாரிகள் கூட்டணியை உடைக்க முடியவில்லை: நாமக்கல் முட்டை விலை நிர்ணயத்தில் தொடரும் குளறுபடி

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நிர்ணயத்தில் குளறுபடி தொடர்கிறது. என்இசிசி விலையை அறிவித்த போதிலும், வியாபாரிகள் கூட்டணி அமைத்து, அதை விட விலையை குறைத்து வாங்குவதால்  பண்ணையாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நாமக்கல்   மண்டலத்தில் உள்ள 1000 கோழிப்பண்ணைகளில் தினமும் 3.50 கோடி முட்டை   உற்பத்தியாகிறது. இதில் 52 கிராம் எடை கொண்ட முட்டைக்கு, என்இசிசி என்ற   அமைப்பு விலை நிர்ணயம் செய்து வருகிறது. கடந்த 4 மாதமாக  தினசரி முட்டை விலை   நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. மைனஸ் இல்லாத விலையும் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு சிறிய பண்ணையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு   கிளம்பியது. இருப்பினும் என்இசிசி நாமக்கல் மண்டல சேர்மன்  டாக்டர்   செல்வராஜ், தனது முடிவை மாற்றி கொள்ளவில்லை. மைனஸ் இல்லாத விலை அறிவிப்பதன்   மூலம், சில்லறை விற்பனை கடைகளில் முட்டை விலை குறையும் என என்இசிசி கூறியது.  ஆனால்,  முட்டை வியாபாரிகள்  கூட்டணி போட்டு கொண்டு, முட்டை விலையை குறையாமல்   பார்த்து கொண்டனர். இதனால் என்இசிசி நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து,   கடைகளில் 70 முதல் 80 காசு வரை அதிகமாக விலை வைத்து முட்டை விற்பனை    செய்யப்பட்டது.  என்இசிசி அதிகமாக விலை குறைக்கும் போது, சிறிய பண்ணையாளர்கள் முட்டை விற்பனையில் நஷ்டம் ஏற்படுவதாக கூறி வந்தனர். இதன்  காரணமாக, என்இசிசி தினசரி முட்டை விலை நிர்ணயத்துக்கு தற்போது   முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. தற்போது,  பழைய முறைப்படி வாரம் 3 முறை  முட்டை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மைனஸ்  விலையை மீண்டும்  என்இசிசியே  அறிவிக்க தொடங்கி விட்டது. இதன் காரணமாக, முட்டை  விலை நிர்ணயத்தில்  ஆண்டாண்டு காலமாக தொடரும் குளறுபடி, மீண்டும்  வந்துள்ளதாக பண்ணையாளர்கள்  புலம்புகிறார்கள். தற்போது நாமக்கல்  மண்டலத்தில் ஒரு முட்டையின் விலை  380 காசாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் முட்டை விலையை 15 காசுகள் குறைத்து, முட்டையின் கொள்முதல் விலையை 365 காசாக என்இசிசி  நிர்ணயம்  செய்தது. பண்ணையாளர்கள் தவிப்புபண்ணையாளர்கள்  இது குறித்து கூறுகையில், ‘என்இசிசி  விலையை விட 15 காசு குறைவாக தான், பண்ணைகளில்  முட்டையை வியாபாரிகள் வாங்கி  செல்கிறார்கள். முட்டை வியாபாரிகள் கூட்டணி  அமைத்து குறைந்த விலைக்கு  கேட்பதால், பண்ணையாளர்களால் ஒன்றும் செய்ய  முடியவில்லை. முட்டையை நீண்ட  நாட்கள் பண்ணையில் வைத்திருக்க முடியாது  என்பதால், ஒவ்வொரு பண்ணையாளரும்,  கிடைத்த விலைக்கு முட்டையை விற்பனை செய்து   வருகிறார்கள்,’ என்றனர்.

மூலக்கதை