துருக்கியில் பூகம்பம்; 22 பேர் பலி: 1000 பேர் காயம்

தினகரன்  தினகரன்
துருக்கியில் பூகம்பம்; 22 பேர் பலி: 1000 பேர் காயம்

எலஜிக்: துருக்கி நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள எலஜிக் மாகாணத்தின் சிவ்ரைஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட பூகம்பத்தில் 20 பேர் பலியாயினர், 1000 பேர் காயம் அடைந்தனர். அங்கு காணாமல் போன 30 பேரை தேடும்  பணி நடக்கிறது. துருக்கி நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ளது எலஜிக் மாகாணம். இங்குள்ள சிவ்ரைஸ் நகரில், நேற்று முன்தினம் இரவு பூகம்பம் ஏற்பட்டது. இது மிக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஹசர் ஏரியின் கரையில் அமைந்துள்ளது. இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகள் பதிவாகியது. இதனால் வீடுகளில் உள்ள மேஜை, நாற்காலிகள் எல்லாம் மக்கள் மீது விழுந்துள்ளது. சுமார் 30 விநாடிகள் இந்த பூகம்பம் நீடித்தது. இதனால் மக்கள் பீதியில் தெருவுக்கு ஓடி வந்தனர். வெளியே குளிர் அதிகமாக இருந்ததால், பலர் குழப்பத்துடன் வீடுகளுக்கு உள்ளேயே இருந்தனர். இடிபாடுகளில் சிக்கி 20 பேர் பலியாயினர், 1015 பேர் காயம் அடைந்தனர். எலஜிக் மாகாணத்தின் அருகே தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மாலத்யா மாகாணத்தில் பூகம்ப பாதிப்பு ஏற்பட்டது. பூகம்ப நடந்த இடத்துக்கு துருக்கி நாட்டின் மீட்பு குழுவினர் நேற்று முன்தினம் இரவே சென்றனர். எலஜிக் மாகாணத்தில் 5  மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. அங்கு இடிபாடுகளை அகற்றி, காணாமல் போன 30 பேரை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.  மாலத்யா மாகாணத்தில் வீடுகளை விட்டு வெளியேறியவர்கள், விளையாட்டு மையங்கள், பள்ளிகள், விருந்தினர் மாளிகைகளில் தங்க வைக்கப்பட்டனர். துருக்கியின் கிழக்கு பகுதி, ஈராக் மற்றும் சிரியாவின் எல்லைப் பகுதிகளிலும் பூகம்பத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன.  பூகம்ப பாதிப்பு குறித்து துருக்கி அதிபர் எர்டோகான் அளித்த பேட்டியில், ‘‘பூகம்பம் துருக்கி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பூகம்பம் பாதித்த மக்களுக்கு உதவ அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. நிலைமை  தற்போது கட்டுக்குள் உள்ளது. பூகம்பத்தால் ஏற்பட்ட சேதங்கள் இனிமேல் மதிப்பிடப்படும்’’ என்றார்.

மூலக்கதை