‘கீப்பராக’ தொடர்வாரா ராகுல் * என்ன சொல்கிறார் கங்குலி | ஜனவரி 25, 2020

தினமலர்  தினமலர்
‘கீப்பராக’ தொடர்வாரா ராகுல் * என்ன சொல்கிறார் கங்குலி | ஜனவரி 25, 2020

கோல்கட்டா: ‘‘இந்திய அணியில் லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படுவது, கேப்டன் மற்றும் பயிற்சியாளர் எடுத்த முடிவு,’’ என கங்குலி தெரிவித்தார்.

இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 27. சமீபத்திய போட்டிகளில் நம்பிக்கை தந்து வரும் இவர், ஆஸ்திரேலிய ஒருநாள், தற்போது நியூசிலாந்து ‘டுவென்டி–20’ தொடரில் விக்கெட் கீப்பராகவும் செயல்படுகிறார்.

இதனால் தோனிக்கு மாற்று என கூறப்பட்ட இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்டுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. இதுகுறித்து முன்னாள் கேப்டன், இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் கங்குலி கூறியது:

டெஸ்ட் அரங்கில் சிறப்பாக துவக்கிய ராகுல், லேசான சரிவை கண்டார். ஒருநாள், ‘டுவென்டி–20’ல் நன்றாக விளையாடுகிறார். தற்போது இவரை விக்கெட் கீப்பராக களமிறக்குவது என அணி நிர்வாகம், கேப்டன் கோஹ்லி முடிவெடுத்துள்ளனர். பேட்டிங்கைப் போல இதிலும் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன்.

‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரிலும் இந்த முடிவை தொடர்வதா, வேண்டாமா என்பது குறித்து அணித் தேர்வாளர்கள், கேப்டன் கோஹ்லி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என்ன முடிவு எடுக்கிறார்களோ, அதுவே என் வழி. இதில் மாற்றம் இல்லை.

இவ்வாறு கங்குலி கூறினார்.

மூலக்கதை