'ஸ்வச் சர்வேக்சன்' செயலியில் ஓட்டுப்போட இலக்கு தேவையா?..தேங்கியுள்ள குப்பை அள்ளினால் போதுமே!

தினமலர்  தினமலர்
ஸ்வச் சர்வேக்சன் செயலியில் ஓட்டுப்போட இலக்கு தேவையா?..தேங்கியுள்ள குப்பை அள்ளினால் போதுமே!

கோவை:வீதிகளில் தேங்கியுள்ள குப்பையை அள்ளுவதற்கு பதிலாக, 'ஸ்வச் சர்வேக்சன்' மொபைல் செயலியில், ஓட்டுப்போடுவதற்கு இலக்கு நிர்ணயித்து, செயல்படுகிறது, கோவை மாநகராட்சி. இது, சுகாதார ஆய்வாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், 'துாய்மை பாரதம்' திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ஆய்வு நடத்தி, நகரங்களை தர வரிசைப்படுத்தி, விருது வழங்கி, கவுரவிக்கிறது. அதற்கு, பொதுமக்களிடம் கணக்கெடுப்பு நடத்துகிறது.ஒவ்வொரு நகரை பற்றியும் சுகாதாரம் மற்றும் முன்னேற்றம் குறித்து, பொதுமக்கள், தங்களது கருத்துகளை, 1969 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கோ, swachh survekshan 2020 என்கிற செயலி வாயிலாகவோ, http://swachhsurveksham2020.org/citizenfeedback என்ற இணைய தளத்திலோ பதிவு செய்யலாம்.

கூகுள் பிளே ஸ்டோரில், மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். பதிலளிப்பவர் பெயர், மொபைல் போன் எண், பாலினம், வசிக்கும் பகுதியை தேர்வு செய்ய வேண்டும். சற்று நேரத்தில், மொபைல் போன் எண்ணுக்கு, குறுந்தகவலாக 'ஓ.டி.பி.,' வரும். அதை செயலியில் பதிவிட்டு, நகரின் சுகாதாரம் மற்றும் முன்னேற்றம் குறித்த கருத்துக்களை, தங்கள் ஓட்டாக பதிவு செய்யலாம். இத்தகைய கணக்கெடுப்பு, கடந்த, 4ம் தேதி துவங்கியது; வரும், 31 வரை நடக்கிறது.கோவை மாநகராட்சி பகுதியில், 18 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்; பணி நிமித்தமாக, 2 லட்சம் மக்கள் வந்து செல்கின்றனர்.
அதனால், 5 லட்சம் பேர், 'ஸ்வச் சர்வேக்சன்' செயலியை பதிவிறக்கம் செய்து, ஓட்டுப்போட வைக்க வேண்டுமென, மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.வார்டுக்கு, 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவும், 100 பேரை பதிவிறக்கம் செய்ய வைக்க வேண்டும்; ஐந்து மண்டலங்களையும் சேர்த்து, 100 வார்டுகளில், ஒரு நாளைக்கு, ஒரு லட்சம் ஓட்டு பதிவு செய்ய வேண்டும். வேறெந்த வேலையும் செய்யாமல், இதற்கு முன்னுரிமை அளித்து, பொதுமக்களை ஓட்டுப்போட செய்ய வேண்டும்.
தினமும் மாலை ஒவ்வொருவரும் எவ்வளவு பேரிடம் ஓட்டுப்போட செய்தோம் என்கிற விபரத்தை மொபைல் எண் மற்றும் 'ஓ.டி.பி.,' எண்ணுடன் சமர்ப்பிக்க வேண்டும் என, சுகாதார ஆய்வாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இது, மாநகராட்சி அலுவலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.'பொதுமக்களே சான்று தருவர்'சுகாதார ஆய்வாளர்களில் சிலர் கூறுகையில், 'நம் நகரின் சுகாதாரம் பற்றிய பொதுமக்கள் கருத்து, சுயமானதாக இருக்க வேண்டும்.
உதவி கமிஷனர்கள் தலைமையில் கல்லுாரிகளுக்கு சென்று, சர்வேக்சன் செயலியை, மாணவ மாணவியரை பதிவிறக்கம் செய்து, ஓட்டுப்போட வைப்பது, 'ரேங்க்' பெறுவதற்காக செய்யும் பித்தலாட்ட நடவடிக்கை. அதற்கு பதிலாக, தெருக்களில் குவிந்திருக்கும் குப்பையை அள்ளி, நகரை சுத்தமாக பராமரித்தால், பொதுமக்களே மாநகராட்சிக்கு நன்சான்று தருவர்' என்றனர்.

மூலக்கதை