துருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
துருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு

துருக்கி: துருக்கி நாட்டில் நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் அங்காராவில் இருந்து 550 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏலாசிக் மாகாணத்தை மையமாக கொண்டு நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக நேரிட்ட நிலநடுக்கத்தாலும், அதை அடுத்து ஏற்பட்ட தொடர் அதிர்வுகளாலும் அப்பகுதியே பலமாக குலுங்கியது. இதில் ஏராளமான வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அந்த இடிபாடுகளில் சிக்கி ஏலாசிக் மாகாணத்தில் 13 பேரும், மலாடியா மாகாணத்தில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் 500 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து, கட்டிட இடிபாடுகளில் 30 வரை சிக்கி இருப்பதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல்வேறு நில அதிர்வுகள் நீடித்து வருவதாக அந்நாட்டு அவசரகால மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அவசர கால உதவிக்கு ராணுவத்தினர் தயார் நிலைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

மூலக்கதை