ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றில் கோகோ காப்

தினகரன்  தினகரன்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றில் கோகோ காப்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட 15 வயது இளம் வீராங்கனை கோகோ காப் (அமெரிக்கா) தகுதி பெற்றார். மூன்றாவது சுற்றில் நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகாவுடன் (ஜப்பான்) நேற்று மோதிய கோகோ காப் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் அபாரமாக வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 7 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. கடந்த ஆண்டு யுஎஸ் ஓபன் 3வது சுற்றில் ஒசாகாவிடம் 3-6, 0-6 என்ற நேர் செட்களில் அடைந்த படுதோல்விக்கு கோகோ காப் பழிதீர்த்துக் கொண்டார். செரீனா ஏமாற்றம்: அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் தனது 3வது சுற்றில் சீனாவின் கியாங் வாங்கை எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் கியாங் வாங் 6-4, 6-7 (2-7), 7-5 என்ற செட் கணக்கில் போராடி வென்று 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார். துனிசியாவின் ஆன்ஸ் ஜாபியருடன் மோதிய கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 5-7, 6-3, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார். இந்த போட்டியுடன் சர்வதேச டென்னிசில் இருந்து அவர் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்தி (ஆஸி.), பெத்ரா குவித்தோவா (செக்.), மரியா சக்கரி (கிரீஸ்), சோபியா கெனின், அலிசான் ரிஸ்கி (அமெரிக்கா) ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். தப்பினார் பெடரர்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேனுடன் மோதிய சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் 4-6, 7-6 (7-2), 6-4, 4-6, 7-6 (10-8) என 5 செட்களில் கடுமையாகப் போராடி வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். இப்போட்டி 4 மணி, 3 நிமிடத்துக்கு நீடித்தது.முன்னணி வீரர்கள் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), மரின் சிலிச் (குரோஷியா), மிலோஸ் ரயோனிச் (கனடா), டீகோ ஸ்வார்ட்ஸ்மேன் (அர்ஜென்டினா), பேபியோ பாக்னினி (இத்தாலி) ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் திவிஜ் ஷரண் - அர்டெம் சிடாக் (நியூசி.) ஜோடி 6-7 (2-7), 3-6 என்ற நேர் செட்களில் மேட் பாவிச் (குரோஷியா) - புரூனோ சோரெஸ் (பிரேசில்) ஜோடியிடம் தோற்று வெளியேறியது. ஆஸி. ஓபன் நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ், சோனி டென் 2.

மூலக்கதை