விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு முன்னோடியாக ஹுயுமனாய்டு ரோபோவை அனுப்ப இஸ்ரோ திட்டம்

தினகரன்  தினகரன்
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு முன்னோடியாக ஹுயுமனாய்டு ரோபோவை அனுப்ப இஸ்ரோ திட்டம்

பெங்களூரு: விண்வெளிக்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் திட்டத்தின்படி வரும் டிசம்பரில் ஏவப்படும் விண்கலத்தில் முதன் முறையாக மனித பண்புகள் மற்றும் உருவம் கொண்ட ஹுயுமனாய்டு ரோபோவும் பயணிக்கிறது. இத்தகைய ரோபோவுக்கு வயோம் மித்ரா என பெயரிடப்பட்டுள்ளது. சந்திராயனுக்கு அடுத்தபடியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பக்கூடிய திட்டம் ககன்யான். இதற்காக மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாயை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு ஒதுக்கியுள்ளது. இதற்கான பணிகளை இஸ்ரோ தொடங்கிவிட்டது. இந்த ககன்யான் திட்டம் இரு வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. ஒன்று 2021ல் விண்கலத்தில் மனிதனை அனுப்புவது. அதற்கு முன்னதாக இந்த ஆண்டு டிசம்பரில் ஆளில்லா விண்கலம் ஒன்றினை விண்ணுக்கு அனுப்புவதாகவும். அந்த விண்கலத்தில் தான் முதன்முறையாக ஹுயுமனாய்டு என்று சொல்லப்படுகின்ற மனிதனுடைய உணர்வுகள் மற்றும் உருவம் கொண்ட ரோபோ பயணிக்கவுள்ளது. இது விண்வெளியின் வெளிப்பகுதியில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்ட மித்ரா எனும் ரோபோ கடந்த 2017ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற உலக தொழில்முனைவோர் மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரோபோதான் பிரதமர் மோடியை வரவேற்றது. இது தொழில்முனைவோர் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. சாதாரண மனிதர்களை போலவே வடிவமைக்கப்பட்ட ஹுயுமனாய்டு ரோபோவான மித்ரா, ஒருவரின் முகத்தை வைத்தே அடையாளம் கண்டு வரும். அத்துடன் குரல் வளம் உள்பட பல்வேறு வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய பிரத்யோகமாக ஹுயுமனாய்டு ரோபோவை தான் இஸ்ரோ வடிவமைத்து விண்வெளி ஆய்வுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த ரோபோ விண்வெளியில் ஏற்படும் பிரச்சனைகளை உடனுக்குடன் உணர்ந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை