கேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து மே.வங்க சட்டசபையில் 27ம் தேதி சிஏஏ எதிர்ப்பு தீர்மானம்: சட்டமன்ற விவகார அமைச்சர் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து மே.வங்க சட்டசபையில் 27ம் தேதி சிஏஏ எதிர்ப்பு தீர்மானம்: சட்டமன்ற விவகார அமைச்சர் தகவல்

கொல்கத்தா: கேரளா, பஞ்சாப் மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது போல், மேற்குவங்க சட்டப்பேரவையில் வருகிற 27ம் தேதி சிஏஏ எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக அம்மாநில அமைச்சர் தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கேரளா சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் அமைச்சரவை கூட்டம் 14ம் தேதி நடைபெற்றது.

இதில், சிஏஏ சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.

மேலும், ‘சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதை நானும் தடுக்க மாட்டேன்; காங்கிரஸ் கட்சியும் தடுக்காது.

ஆனால், சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது’ என அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். இதனையடுத்து பஞ்சாப் சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், மேற்கு வங்க சட்டசபையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வருகிற 27ம் தேதி தீர்மானத்தை கொண்டுவரும் என்று மாநில சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்தார். முன்னதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிக்கும் தீர்மானத்தை ஆதரிக்க அவர் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளையும் அணுகி ஆதரவு கோரினார்.



அப்போது சாட்டர்ஜி கூறியதாவது: நாங்கள் சிஏஏ-வை எதிர்க்கும் தீர்மானத்தை விதி 169 இன் கீழ் சட்டமன்ற சபாநாயகர் பிமான் பானர்ஜிக்கு சமர்ப்பித்தோம். ஜன.

27ம் தேதி மதியம் 2 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் நடக்கும். அப்போது சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் அப்போது அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்படும்.

மற்ற அனைத்து தரப்பினரும் இதை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதன்பின், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படும்.

முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் அப்துல் மன்னனிடம் தீர்மானம் குறித்து ஆலோசனை நடத்தினேன்.

சிஏஏ-வுக்கு உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கு முன், மக்கள் ஆதரவுடன் போராட்டங்களை முன்ெனடுப்போம் என்று கூறினார்.

.

மூலக்கதை