தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பெற்றோர் குறித்த கேள்விகளை கைவிடுங்கள்: மத்திய அமைச்சர் கோரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பெற்றோர் குறித்த கேள்விகளை கைவிடுங்கள்: மத்திய அமைச்சர் கோரிக்கை

புதுடெல்லி: தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பெற்றோர் குறித்த கேள்விகளை கைவிடலாம் என்று, மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜான்ஷக்தி கட்சியின் (எல்ஜேபி) தலைவரும், மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பஸ்வான், டெல்லியில் கூறியதாவது: பெற்றோரின் பிறந்த தேதி மற்றும் இடம் குறித்த கேள்விகளை தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இருந்து நீக்க வேண்டும் என்ற பரவலான கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

என் பெற்றோரின் பிறந்த தேதி கூட எனக்குத் தெரியாது.

எனவே, பெற்றோரின் தேதிகளை நிரூபிக்கும் ஆவணங்களை கேட்பதை கைவிடலாம்.

எனது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறேன். இதேபோல் பலமுறை இவ்விவகாரம் குறித்து அரசிடம் தெளிவுபடுத்தி உள்ளேன்.

இதுவரை, என். பி. ஆர் படிவத்தில் மாற்றங்கள் குறித்து உள்துறை அமைச்சகத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. என்பிஆர் படிவத்தை அரசின் சார்பில் இன்னும் அறிவிக்கவில்லை.

பெற்றோரின் பிறந்த தேதி மற்றும் இடம் குறித்த இரண்டு கேள்விகளும் என்பிஆர் படிவத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன.

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தைப் பொருத்தவரை பரவலான ஆர்ப்பாட்டங்கள் இருப்பதால், ஒரு உண்மையான இந்திய குடிமகனின் குடியுரிமையை எந்த அரசாங்கமும் ரத்து செய்ய முடியாது.

தலித் அல்லது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் குடியுரிமையை பறிக்க முடியாது. அசாம் உட்பட நாடு முழுவதும் என்ஆர்சி-யை செயல்படுத்துவது குறித்து, எந்தவொரு விவாதமும் நடத்தி முடிக்கவில்லை என்று பிரதமர் ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளார்.

அதனால் அதுகுறித்து விவாதம் செய்வதில் என்ன பயன் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை