உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குடியேறும் போராட்டம்... கால்நடைகளுடன் சென்றனர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குடியேறும் போராட்டம்... கால்நடைகளுடன் சென்றனர்

பொங்கலூர்,: மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும் தமிழக அரசின் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகமும் இணைந்து தமிழகத்தின் மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் 12 இடங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்காக விவசாயிகளின் விளை நிலங்கள் வழியாக திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளன. இதனால் பாதிக்கப்படும் சிறு, குறு விவசாயிகள் விளைநிலங்களை தவிர்த்து சாலையோரமாக கேபிள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி கடந்த 3 ஆண்டுகளாக பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே நில அளவீடு செய்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீடு வழங்காத நிலையில், தற்போது மின் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த செம்மிபாளையம் கிராமத்தில் நேற்று உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிக்காக பவர்கிரிட் நிறுவனத்தினர் வந்திருந்தனர். இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற அப்பகுதி விவசாயிகள் உரிய இழப்பீடு தொகையை வழங்காமல் பணி செய்யக்கூடாது என அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்படாததால், விவசாயிகள் போலீசாருடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதனிடையே மின்கோபுரம் அமைக்கும் பணியால் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி செம்மிபாளையம் பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகள், கால்நடைகளுடன் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடியேறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்து நடைபயணம் மேற்கொண்டனர்.

உயர்மின் கோபுரம் அமைக்கும் மத்திய, மாநில அரசு நிறுவனங்களின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆடு, மாடு, உடமைகளுடன் பல்லடம் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.

இதையடுத்து வருவாய் மற்றும் காவல்துறையினர் அவர்களை பேச்சுவார்த்தைக்கு பலமுறை அழைத்தனர்.

ஆனாலும் விவசாயிகள் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றதால் பல்லடம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

.

மூலக்கதை