மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்தவர் பெங்களூரு போலீசாரிடம் சரணடைந்தார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்தவர் பெங்களூரு போலீசாரிடம் சரணடைந்தார்

பெங்களூரு: மங்களூரு விமான நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைத்து விட்டு தலைமறைவாகி இருந்த குற்றவாளி ஆதித்யராவ், இன்று அதிகாலை பெங்களூரு அல்சூர் கேட் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். மங்களூரு விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை கண்டெடுக்கப்பட்ட 10 கிலோ எடை கொண்ட வெடி குண்டு கர்நாடகம் மட்டுமில்லாமல், ேதசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாட்டில் பல மாநிலங்களில் சர்வதேச தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், வரும் 26ம் தேதி குடியரசு தின நாளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு கடந்த வாரம் மத்திய உளவுதுறை எச்சரிக்கை விட்டுள்ள நிலையில், மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை அதிகமாக்கியது.

இந்நிலையில் விமான நிலையத்தில் வெடி குண்டு வைத்து விட்டு தலைமறைவாக இருந்த மர்ம மனிதரை கண்டுபிடிப்பதற்காக மூன்று சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.   விமான நிலையத்திற்கு வரும் அனைத்து சாலைகளிலும் பொருத்தியுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை சைபர் கிரைம் போலீசார் பரிசோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 20க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் ேதசிய பாதுகாப்பு படை (என். எஸ். ஜி) மற்றும் தீவிரவாத தடுப்பு படை (ஏடிஎஸ்) மங்களூருவில் விசாரணை தொடங்கியுள்ளனர். இதனிடையில் இது தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக ேதசிய புலனாய்வு படை (என். ஐ. ஏ) அதிகாரிகளும் தீவிர விசாரணையில் உள்ளனர்.



இந்நிலையில் இன்று அதிகாலையில் பெங்களூரு மாநகரில் உள்ள அல்சூர் கேட் போலீஸ் நிலையத்தில் ஆதித்யராவ் என்பவர் சரணடைந்தார். மங்களூரு விமான நிலையத்தில்  வெடிகுண்டு வைத்து விட்டு சென்றது நான் தான் என்று கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியபோது, விமான நிலைய வளாகத்தில் வெடிகுண்டு வைத்து தப்பியோடியதை ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவுக்கு தகவல் கொடுத்தனர்.

அவர் உடனடியாக அல்சூர் கேட் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவரிடமும் வெடிகுண்டு வைத்து சென்றதை ஒப்புக்கொண்டார்.

இந்த புகாரில் பல இடங்களில் போலீசார் தேடி, கால நேரம் மற்றும் தேவையில்லாத பணம் விரயம் ஆவதை தவிர்க்க வேண்டும் என்பதுடன் குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைய வேண்டும் என்று முடிவு செய்து,

போலீசார் யாரிடமும் சிக்காமல் நேரில் வந்து சரணடைந்து விட்டதாக மாநகர போலீஸ் கமிஷனரிடம் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது. சரணடைந்துள்ள ஆதித்யராவை உடனடியாக விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.

ஒரு மணி நேர பரிசோதனைக்கு பின் ரகசிய இடத்திற்கு விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அவரிடம், என்ன நோக்கத்திற்காக குண்டு வைத்தார், வெடிகுண்டு தயாரித்து கொடுத்தது யார்? எங்கு தயாரிக்கப்பட்டது? இந்த சதியின் பின்னால் யார் யாருடைய கைவரிசை உள்ளது என்பது உள்பட பல கேள்விகள் ேகட்டு விவரம் பெறுவார்கள் என்று தெரியவருகிறது.

வெடிகுண்டு குற்றவாளி சரணடைந்துள்ளதை மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையும் உறுதி செய்துள்ளார்.

.

மூலக்கதை