பாஜ கூட்டணியில் இருந்து வெளியேற தயார்: அமைச்சர் பாஸ்கரன் தடாலடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாஜ கூட்டணியில் இருந்து வெளியேற தயார்: அமைச்சர் பாஸ்கரன் தடாலடி

இளையான்குடி: பாஜ கூட்டணியில் இருந்து எந்நேரமும் வெளியேற தயார் என அமைச்சர் பாஸ்கரன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் நேற்றிரவு எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், கதர் மற்றும் கிராம  தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது: பாஜ கூட்டணியை விட்டு எந்நேரத்திலும் பிரிந்து செல்ல தயாராக இருக்கிறோம். குடியுரிமை சட்டத்திற்கு அமைச்சரவையில் பலர் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர்.

நீங்கள் (மக்கள்) எங்களை ஒதுக்கி விட்டீர்களே தவிர நாங்கள் உங்களை ஒதுக்க மாட்டோம்.

எம்எல்ஏ தேர்தலில் நீங்கள்  எங்களுக்கு ஓட்டுப் போடவில்லை.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் 3 ஓட்டு, 5 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகமே எங்கள் கையில்  உள்ளது.

நாங்கள் நினைத்திருந்தால் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்திருக்கலாம். ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை.   முறையாக நடந்து கொள்ளுமாறு முதல்வர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நாங்கள் சாதாரண மனிதர்கள்.

நீங்கள் எங்கேயும், எப்போதும் எங்களை அணுகலாம். எங்கள் எம்எல்ஏ, சேர்மன் மற்றும் நிர்வாகிகளின் சட்டையைப்  பிடித்து கேள்வி கேட்கலாம்.

மீட்டிங்கில் பேசியது போல் செய்துள்ளீர்களா என்று காங்கிரஸ் நிர்வாகிகளிடம் உங்களால் கேட்க முடியுமா? அவர்கள்  எங்கே இருக்கிறார்கள் என்று உங்களால் தெரிந்து கொள்ள முடியுமா’’ என்றார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை என சமீபத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்த  நிலையில், பாஜ கூட்டணியில் இருந்து எந்நேரமும் வெளியேற தயார் என்ற அமைச்சர் பாஸ்கரனின் பேச்சு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை