நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் மெகா மோசடி: ரூ440 கோடி லஞ்சம் கைமாறுகிறது... அமைச்சர்களிடம் விவசாயிகள் பகீர் புகார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் மெகா மோசடி: ரூ440 கோடி லஞ்சம் கைமாறுகிறது... அமைச்சர்களிடம் விவசாயிகள் பகீர் புகார்

தஞ்சை: கொள்முதல் நிலையங்களில் லஞ்சம், எடை மோசடி மூலம் மேலதிகாரி வரை ரூ440 கோடி லஞ்சம் கைமாறுவதாக தஞ்சையில் நேற்று நடந்த விவசாயிகள், அலுவலர்களுடனான முத்தரப்பு கூட்டத்தில் அமைச்சர்கள் காமராஜ், துரைக்கண்ணுவிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நடப்பாண்டு சம்பா நெல் கொள்முதல் தொடர்பாக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை சார்பில் விவசாயிகள் மற்றும் அலுவலர்களுடனான ஒருங்கிணைந்த முத்தரப்பு கூட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

உணவுத்துறை அமைச்சர் காமராஜ், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் ஓ. எஸ். மணியன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

நுகர்பொருள் வாணிபகழக நிர்வாக இயக்குனர் சுதாதேவி, உணவுத்துறை செயலாளர் தயானந்த கட்டரியா, கலெக்டர்கள் கோவிந்தராவ் (தஞ்சை), ஆனந்த் (திருவாரூர்), பிரவீன்நாயர் (நாகை) ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கொள்முதல் நிலையங்களில் 62 கிலோ சிப்பம் நெல்லை விற்க ₹35 கட்டாய லஞ்சம் வசூலிக்கப்படுகிறது. 100 கிலோவுக்கு ரூ100 லஞ்சம் வாங்குகின்றனர்.

எடையில் குவிண்டாலுக்கு ரூ100 நெல் மோசடி நடக்கிறது. லஞ்சம், எடை மோசடி மூலம் ரூ440 கோடி லஞ்சம் கைமாறுகிறது.

இதுகுறித்து கேட்டால் மேலதிகாரி வரை இந்த பணம் கமிஷன் செல்வதாக கூறுகின்றனர். இதை லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை கண்டுகொள்ள மறுக்கிறது.

பறக்கும்படையும் நடவடிக்கை எடுப்பதில்லை. லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் நெல்லை விற்கமுடியாமல் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் காத்துகிடக்கும் அவல நிலைய நீடித்து வருகிறது.



எனவே, முறைகேட்டில் ஈடுப்படும் அலுவலர்கள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைளை காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்பட அனைத்து விவசாயிகள் சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் முன் வைத்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்திற்கு பின் காமராஜ் அளித்த பேட்டி: முறைகேட்டில் ஈடுபடும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது விவசாயிகள் புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் 1000 மூட்டைகளாக கொள்முதல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை