பிப்.8ம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக...பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம்

தினகரன்  தினகரன்
பிப்.8ம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக...பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம்

டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை கைப்பற்றும் விதமாக 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. 70 சட்டமன்ற தொகுதிகளைக்கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரேகட்டமாக   வருகின்ற பிப்ரவரி 8ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காகத்தான் தற்பொழுது ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் டெல்லியில் ஆட்சியை பிடிக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ்  கூட்டணியில் ஆர்ஜேடி கட்சிக்கு 4 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக 67 இடங்களில் போட்டியிடுகிறது. கடந்த 1998 முதல் 2013ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக மூன்று முறை டெல்லி சட்டப் பேரவையை கைப்பற்றிய காங்கிரஸ்,  ஏற்கனவே 54  வேட்பாளர்களின் பட்டியலை சனிக்கிழமை வெளியிட்டது. மேலும் ஏழு வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் நேற்று முன்தினம் வெளியிட்டது. இதற்கிடையே, பாஜக தலைமை நேற்று அதிகாலை 1 மணியளவில் தனது  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக புதுடெல்லி தொகுதி வேட்பாளராக சுனில் யாதவ் என்பவரை அறிவித்துள்ளது.  காங்கிரஸ் ஏற்கனவே நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியை பிடிக்கும் விதமாக பா.ஜ.,வும் தன்னுடைய நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த  பட்டியலில் பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஹேமமாலினி, சன்னி தியோல், பாடகர்கள் ஹன்ஸ் ராஜ்ஹன்ஸ், போஜ்பூரி நட்சத்திரமான ரவி கிஷான் , தினேஷ்லாலா யாதவ், மற்றும் கிரிக்கெட் வீரரும், பா.ஜ., எம்.பி.,யான  கவுதம் காம்பீர் , உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர், அரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார், உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திரா சிங் ராவ்த், ம.பி., முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங்  சவுகான் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.கடந்த 2015 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி, அனுராக் தாகூர், முக்தார் அப்பாஸ் நக்வி தாவர் சந்த் கெலாட் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். இருப்பினும் 70 தொகுதிகளில் வெறும் மூன்று இடங்களை  மட்டுமே பா.ஜ., பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை