மத்திய அரசின் திட்டங்கள் ஜம்மு - காஷ்மீர் மக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் கனவு: ஸ்ரீநகரில் அமைச்சர் நக்வி பேச்சு

தினகரன்  தினகரன்
மத்திய அரசின் திட்டங்கள் ஜம்மு  காஷ்மீர் மக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் கனவு: ஸ்ரீநகரில் அமைச்சர் நக்வி பேச்சு

ஸ்ரீநகர்: மத்திய அரசின் திட்டங்கள் ஜம்மு - காஷ்மீர் மக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் கனவு என்று அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை கடந்த ஆகஸ்டு 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்து அறிவித்தது. இதனால், காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம் நிலவி வருவதால், பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. உள்ளூர் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு  அமைப்புகளின் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.தகவல் தொடர்பு முடக்கப்பட்டதோடு ஊடகம், பத்திரிகைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது படிப்படியாக இயழ்பு நிலை திரும்பி வருகிறது.  இந்நிலையில் காஷ்மீரில் சிறப்பு நீக்கம் செய்யப்பட்டு 5 மாதங்களுக்கு பிறகு மத்திய அமைச்சர்கள் 36 பேர் அங்கு சென்று மக்களை சந்தித்து பேசி வருகின்றனர். இந்த வரிசையில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ஸ்ரீநகரில் உள்ள சந்தைக்கு சென்று வியாபாரிகளை சந்தித்து பேசினார். பின்னர் பேசிய அவர்; சிறப்பு தகுதி வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளதை மக்கள் வரவேற்பதாக தெரிவித்தார். மக்கள் அனைவரும் இங்கு உற்சாகமாக இருப்பதை பார்க்க முடிகிறது. காஷ்மீரில் பாதுகாப்பு சூழல் சாதகமாகத்தான் உள்ளது. அவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துவோம். பல்வேறு சாதகங்களை அவர்களுக்கு புரிய வைக்க இந்த முயற்சி பலன் அளிக்கும். தற்போதைய சூழல் மத்திய அரசுக்கு இது தேவையான ஒன்று. காஷ்மீர் மக்கள் கோரிக்கைகள் அனைத்தும் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

மூலக்கதை