63 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு மத்திய பட்ஜெட்டை விட அதிகம்!: ஆக்ஸ்ஃபாம் அதிர்ச்சி தகவல்

தினகரன்  தினகரன்
63 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு மத்திய பட்ஜெட்டை விட அதிகம்!: ஆக்ஸ்ஃபாம் அதிர்ச்சி தகவல்

டெல்லி: இந்திய மக்கள் தொகையில் 1 சதவிகிதமே உள்ள பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ஒட்டுமொத்த நாட்டுக்கே தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டை விட அதிகம் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. உலகிலுள்ள பெரும் கோடீஸ்வரர்கள் குறித்து ஆக்ஸ்ஃபாம் என்ற ஒருங்கியலமைப்பு தயாரித்துள்ள அறிக்கையில் ஏழைகளுக்கும், செல்வந்தர்களும் இடையே நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு அம்பலமாகியுள்ளது. டைம் டு கேர் என்ற அந்த அறிக்கையில் உலகிலுள்ள 2 ஆயிரத்து 153 பெரும் செல்வந்தர்களின் சொத்து மதிப்பு உலக மக்கள் தொகையில் 60 சதவிகிதாக உள்ள 460 கோடி பேர் கைவசம் உள்ள தொகைக்கு நிகரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 2018 - 2019 நிதியாண்டு பட்ஜெட்டின் தொகை 24 லட்சத்து 42 ஆயிரத்து 200 கோடி ரூபாய் என்றும், அது நாட்டில் உள்ள 63 பெரும் கோடீஸ்வரர்களின் சொத்தை விட குறைவு என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஒருவரின் ஓராண்டு ஊதியத்தை, வீட்டு வேலைகளை செய்யும் பணிப்பெண் ஒருவர் ஈட்ட 22 ஆயிரத்து 277 ஆண்டுகள் ஆகும் என்ற அதிர்ச்சி தகவலை ஆக்ஸ்ஃபாம் விளக்கியுள்ளது. வினாடிக்கு 106 ரூபாய் ஈட்டும் அந்த அதிகாரி, 10 நிமிடங்களில் சம்பாதிக்கும் தொகை சாதாரண பணியாளர் ஒருவரின் ஓராண்டு ஊதியத்துக்கு நிகராகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்திய இல்லத்தரசிகள் ஊதியம் இன்றி தங்கள் குடும்பங்களுக்காக ஆண்டுக்கு 326 கோடி மணி நேரம் பணிபுரிவதாகவும், அது 19 லட்சம் கோடி ரூபாய்க்கு நிகரானது என்றும், இந்தியாவின் ஆண்டு கல்வி பட்ஜெட்டான 93 ஆயிரம் கோடியை விட 20 மடங்கு அதிகம் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகின் 1 சதவிகிதமே உள்ள பெரும் கோடீஸ்வரர்கள் தங்கள் சொத்து வரியை ஆண்டுக்கு 0.5 சதவீதம் கூடுதலாக செலுத்தினாலேயே 12 கோடி பேருக்கு புதிய வேலை வாய்ப்புகளை வழங்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பொருளாதாரத்தில் நலிவை சந்தித்துள்ள நாடுகளின் அரசாங்கங்கள் கூட செல்வந்தர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பைகளை நிரப்புவதில் குறியாக இருப்பதாகவும், தெளிவான கொள்கைகளை வகுத்து அரசாங்கங்கள் சாட்டையை சுழற்றாத வரை இத்தகைய பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கவே செய்யும் என்றும் ஆக்ஸ்ஃபாம் நிறுவனம் கூறியுள்ளது.

மூலக்கதை