திருப்பதியில் ஒரே நாளில் 7 வாகனத்தில் மலையப்பசுவாமி வீதியுலா: பிப்ரவரி 1ம் தேதி ரத சப்தமி

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருப்பதியில் ஒரே நாளில் 7 வாகனத்தில் மலையப்பசுவாமி வீதியுலா: பிப்ரவரி 1ம் தேதி ரத சப்தமி

திருமலை: ரத சப்தமியொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 1ம் தேதி 7 வாகனத்தில் மலையப்பசுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு  அருள்பாலிக்க உள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் தர்மாரெட்டி கூறியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கி. பி 1564ம் ஆண்டு முதல் ரதசப்தமி விழா நடைபெற்று வருவதாக கோயில் பதிவுகளில் உள்ளது.

ரத  சப்தமியன்று மலையப்ப சுவாமி ஒரே நாளில் 7 வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இது மினி பிரம்மோற்சவம் என்றும்  அழைக்கப்படுகிறது.

இந்தாண்டு வரும் 1ம் தேதி ரதசப்தமி விழா நடக்கிறது. அன்று அதிகாலை சூரிய பிரபை வாகனத்தில் தொடங்கி இரவு சந்திர  பிரபை வாகனத்துடன் ரதசப்தமி விழா நிறைவு பெறுகிறது.

இதையொட்டி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த  உற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் தோமாலை சேவை, சுப்ரபாதம், அர்ச்சனை சேவையில் ஏகாந்தமாக பக்தர்கள்  அனுமதிக்கப்படாமல் அர்ச்சகர்கள் மட்டும் செய்ய உள்ளனர்.

இதேபோல் 1 வயது குழந்தையுடன் பெற்றோர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் மூத்த  குடிமக்களுக்கான சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்படுகிறது.

விழாவை காண வரும் பக்தர்களுக்கு நிழற்பந்தல் அமைக்கவும் பால், டீ, காபி மற்றும் அன்னப்பிரசாதம் தொடர்ந்து வழங்குவதற்கும் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் பாதுகாப்புக்காக தேவஸ்தான விஜிலன்ஸ் மற்றும் போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாகன சேவை விவரம்
அதிகாலை 5. 30- சூரிய பிரபை வாகனம், காலை 9. 00- சிறிய சேஷ வாகனம், பகல் 11. 00- கருட வாகனம், மதியம் 1. 00- அனுமந்த வாகனம், பிற்பகல்  2. 00 - சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி,  மாலை 4. 00- கற்பக விருட்ச வாகனம், மாலை 6. 00 - சர்வ பூபாள வாகனம், இரவு 8. 00- சந்திரபிரபை வாகனம்.

.

மூலக்கதை