ஆவடியில் பெற்றோர் கண்டித்ததால் மாயமான 4 பள்ளி மாணவிகள் மீட்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆவடியில் பெற்றோர் கண்டித்ததால் மாயமான 4 பள்ளி மாணவிகள் மீட்பு

ஆவடி: ஆவடி, காமராஜர் நகர் பிரதான சாலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். இங்கு  பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 4 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன் பள்ளிக்கு செல்வதாக வீட்டில் பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றனர்.   அதன்பிறகு அவர்கள் மாயமாகிவிட்டனர்.

அவர்களை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து ஆவடி காவல் நிலையத்தில் 4 மாணவிகளின்  பெற்றோரும் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், இந்த 4 மாணவிகளும் சரிவர படிக்காததால் தேர்வில் குறைந்த  மதிப்பெண் எடுத்து வருவதை அவர்களின் பெற்றோர் கண்டித்துள்ளனர்.



இதையடுத்து அந்த 4 மாணவிகளும் பள்ளிக்கு செல்லாமல் மாயமானது  தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மாயமான 4 மாணவிகளில் ஒருவரில் செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரித்தனர்.

இதில், அந்த செல்போன் எண்ணின்  டவர் இருக்கும் இடம் பெங்களூர் என காட்டியது. இதைத் தொடர்ந்து அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, அந்த 4 மாணவிகளும் பெங்களூரில்  இருப்பது உறுதியானது. அந்த மாணவிகளிடம் நடைபெற்ற விசாரணையில், இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன் மாநகர பேருந்தில் மெரீனா பீச்சுக்கு சென்றுள்ளனர்.

பின்னர்  அங்கு கடலில் குளித்துவிட்டு, பின்னர் சென்ட்ரலில் இருந்து ரயில் மூலம் பெங்களூர் சென்றிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, ஆவடி  போலீஸ் எஸ்ஐ கோகிலா தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று பெங்களூர் விரைந்தனர்.

பெங்களூர் நகர போலீசாரின் உதவியுடன், அங்கு  சுற்றி திரிந்த 4 பள்ளி மாணவிகளையும் தனிப்படை போலீசார் மீட்டனர். இன்று அதிகாலை சென்னைக்கு கொண்டு வந்து, அந்த 4 மாணவிகளையும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

4 பள்ளி மாணவிகள் மாயமான  விவகாரத்தில் உடனடியாக கண்டுபிடித்து ஒப்படைத்த ஆவடி போலீசாரின் துரித நடவடிக்கையை அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

.

மூலக்கதை