திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் வேதனை: தீவன விலை உயர்வால் மாடுகளை விற்கும் அவலம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் வேதனை: தீவன விலை உயர்வால் மாடுகளை விற்கும் அவலம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில், 526 ஊராட்சியில் 1,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராம மக்கள் விவசாயத்தையே  நம்பியுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர், வீடுகளில் பசு மாடுகள் வளர்க்கின்றனர். இதனால், பால் உற்பத்தியில் திருவள்ளூர் மாவட்டம்,  தமிழகத்தில், முன்னணியில் இருந்தது.

கடும் வறட்சியால், தீவனங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தீவனங்கள் விலையும்  அதிகரித்துள்ளதால், ஒரு பசுமாட்டின் பராமரிப்பு செலவு மாதம்,10 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.



அந்த அளவுக்கு பால் மூலம் வருமானம் இல்லாததால், நஷ்டத்தை சமாளிக்க முடியாமல், விவசாயிகள், பல ஆண்டுகளாக வளர்த்த பசுக்களை  விற்பனை செய்கின்றனர். சந்தையில் பசுமாடுகள் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதுகுறித்து, விவசாயி ஒருவர் கூறுகையில், ‘பல ஆண்டுகளாக பசுமாடுகள் வளர்த்து வருகிறேன்.

வறட்சி காரணமாக, தீவன விலை அதிகரித்துள்ளது.   பசு மாடு ஒன்றுக்கு, வைக்கோல், ஒரு மூட்டை தவிடு, புண்ணாக்கு, மருந்து, பராமரிப்பு செலவு என, மாதம் ரூ. 10 ஆயிரத்துக்கு மேல் செலவாகிறது.

2 ஆண்டுகளில் பராமரிப்பு செலவு இரட்டிப்பாகி விட்டது.

அதற்கேற்ப, பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. இதனால், நஷ்டத்தை  சமாளிக்க முடியாமல், கடந்த வாரம் பசுக்களை தலா, ரூ. 15 ஆயிரத்துக்கு விற்பனை செய்தேன்.

ஒரு சிந்து பசு, 5 மாதங்களுக்கு முன், ரூ. 30  ஆயிரத்துக்கு விற்றது.   வறட்சி மற்றும் தீவன விலை உயர்வு காரணமாக பசுக்கள் விலை பாதியாக குறைந்து விட்டது’ என்றார்.

.

மூலக்கதை