வருகிற 5ம் தேதி கும்பாபிஷேக கோலாகலம் தஞ்சை பெரிய கோயிலில் 108 யாக குண்டம் அமைப்பு: கொடிமரம் தயாரிக்கும் பணி தீவிரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வருகிற 5ம் தேதி கும்பாபிஷேக கோலாகலம் தஞ்சை பெரிய கோயிலில் 108 யாக குண்டம் அமைப்பு: கொடிமரம் தயாரிக்கும் பணி தீவிரம்

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் வரும் 5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி 108 யாக குண்டங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. தஞ்சை பெரியகோயிலில் கடந்த 1996ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

அதன் பின்னர் வரும் 5ம் தேதி காலை கும்பாபிஷேகம் நடக்கிறது.   இதையொட்டி பெரிய கோயிலில் பாலாலயம் கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதி நடந்தது. பெருவுடையார், பெரியநாயகி அம்மன் மற்றும் நந்தி பெருமான்  ஆகிய சன்னதிகளுக்கு முன்பு கொடிமரம் அமைந்துள்ளது.

17 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட இந்த கொடிமரம் தேக்கு மரத்தால் ஆனது. இந்த  கொடிமரத்தை சுற்றிலும் உலோகம் பொருத்தப்பட்டு இருந்தது.

தற்போது பெரியகோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி கொடிமரத்தை சுற்றி இருந்த உலோகம் கழற்றப்பட்டு பாலீஷ் போடப்பட்டு  வருகிறது.

கொடிமரத்தின் பீடம் மட்டும் 4. 5 அடி உயரம் கொண்டது. அதற்கு மேல் 28. 5 அடி உயரத்தில் கொடிமரம் இருந்தது.

அடிப்பகுதியில்  கொடிமரம் சேதமடைந்திருந்ததால் பழைய கொடிமரம் அகற்றப்பட்டு இதற்கு பதிலாக புதிய கொடிமரம் நடப்படுகிறது. இதற்காக சென்னையில் பர்மா  தேக்கு மரத்தை ரூ. 9 லட்சத்திற்கு வாங்கினர்.

இந்த தேக்குமரம் சென்னையில் இருந்து லாரி மூலம் திருவெறும்பூரில் உள்ள மர அரவை ஆலைக்கு  கொண்டு செல்லப்பட்டு அறுக்கப்பட்டது.

40 அடி உயரத்தில் உள்ள மரம், லாரி மூலம் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது கொடிமரம் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து  வருகின்றன.

புதிய கொடிமரத்தில் பிரம்ம பாகம், விஷ்ணு பாகம் 4. 5 அடி உயரத்திலும், ருத்ர பாகம் 28. 5 அடி உயரத்திலும் தயார் செய்யப்படுகிறது.   இந்த பணிகள் அனைத்தும் பழைய பாரம்பரிய முறைப்படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் தீவிரமாக நடந்துவருகிறது.   பணிகள் முடிவடைந்தவுடன் கொடிமரம் அமைக்கப்பட்டு, ஏற்கனவே கொடிமரத்தில் சுற்றப்பட்டு இருந்த உலோகம் பொருத்தப்படும்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 8 கால யாகசாலை பூஜை வரும் 1ம் தேதி துவங்குகிறது.

இதற்காக கோயில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் 108 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

.

மூலக்கதை