கீழக்கரையில் தங்கி பணம் வசூல் காஷ்மீர் வாலிபர்களிடம் விசாரணை: சென்னைக்கு அனுப்பிவைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கீழக்கரையில் தங்கி பணம் வசூல் காஷ்மீர் வாலிபர்களிடம் விசாரணை: சென்னைக்கு அனுப்பிவைப்பு

சாயல்குடி: கீழக்கரையில் பணம் வசூலில் ஈடுபட்ட காஷ்மீர் இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்திவிட்டு சென்னைக்கு அனுப்பிவைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் வட மாநிலங்களை சேர்ந்த 2 இஸ்லாமிய இளைஞர்கள் நன்கொடை வசூல் செய்வதாக உளவுத்துறை  போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மத்திய, மாநில உளவுத்துறை போலீசார் மற்றும் கியூ பிராஞ்ச் போலீசார், கீழக்கரை டிஎஸ்பி  முருகேசன் ஆகியோர் சென்று விசாரித்தனர். பின்னர் அந்த இளைஞர்கள் தங்கியிருந்த மேன்சனுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அவர்கள் ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பாராமுல்லா மாவட்டத்தை சேர்ந்த செய்யது அகம்மது பீர்(32), இம்ரான் ஹபீப்ஷா(28) என தெரியவந்தது.   அங்குள்ள மதரசா எனப்படும் ஆதரவற்ற குழந்தைகள் தங்கி படிக்கும் பள்ளியில் பணியாற்றி வருவதாகவும் அங்கு படிக்கும் மாணவர்களின் கல்வி,  உணவு செலவிற்காக நன்கொடை வசூல் செய்வதற்காக தமிழகம் வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இவர்களது உறவினர் படித்து வருகிறார்.

அவரது உதவியுடன் கடந்த ஒரு மாதமாக சென்னையில் தங்கி, அங்கும் நன்கொடை வசூல் செய்துள்ளனர்.   அவரின் அறிவுறுத்தலின்படி நன்கொடை வசூல் செய்வதற்காக கீழக்கரை  வந்துள்ளனர்.

கீழக்கரை பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மேன்சனில் அறை எடுத்து தங்கிய அவர்கள், சிலரிடம் வசூல் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார், 2 பேரின் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்தனர்.

தீவிர விசாரணைக்கு பிறகு இருவரையும் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

.

மூலக்கதை