குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 143 மனு தாக்கல்: தடை விதிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு...4 வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 143 மனு தாக்கல்: தடை விதிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு...4 வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தடை விதிக்க உச்சநீதிமன்றம் இன்று மறுத்து விட்டது. வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாட்டிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் மதத்தைச் சாராதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில், குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் (சிஏஏ) மேற்கொள்ளப்பட்டது. அந்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

ஜன. 10ம் தேதி முதல் அமலுக்கு வந்த அந்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 143 பேர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.



குறிப்பாக இந்தச் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் மனோஜ் ஜா, திரிணாமுல் காங்கிரஸ் எம். பி மவுஹா மொய்த்ரா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, ஜாமியா உலேமா-ஏ-ஹிந்த், அனைத்து அஸ்ஸாம் மாணவா் சங்கம், அசாம் கண பரிஷத்,  அமைதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, மக்கள் நீதி மய்யம், சட்டப்  படிப்பு மாணவர்கள் உள்ளிட்டவர்களும் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.   அதில், ‘குறிப்பிட்ட இச்சட்டம், இரண்டு வகைப்படுத்துகிறது. ஒன்று மத அடிப்படையிலான வகைப்பாடு.

மற்றுமொன்று, புவியியல் ரீதியிலான வகைப்பாடு. இரண்டு வகைப்பாடுகளுக்கும் எந்தக் காரணங்களும் இல்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



முன்னதாக, கடந்த டிச. 18ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே தலைமையிலான அமர்வில் நடைபெற்ற விசாரணையின்போது,  குடியுரிமை திருத்தச் சட்ட அமலாக்கத்துக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம்  மறுத்துவிட்டது.

அதேசமயம், அரசமைப்புச் சட்டப்படி குடியுரிமை திருத்தச்  சட்டம் செல்லுமா? என ஆராய்வதற்கு உச்சநீதிமன்றம் முடிவு செய்தது. மேலும்,  இச்சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது ஜன.

2வது வாரத்துக்குள்  பதிலளிக்குமாறு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநில சட்டப் பேரவையில் அம்மாநில முதல்வர்களால் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.



இந்நிலையில், இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன், மேற்கண்ட மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது, வழக்கு விசாரணைக்காக  வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் அதிகளவில் நீதிமன்ற வளாகத்தில் கூடியதால் ஏற்பட்டுள்ள நெரிசல் காரணமாக விவாதங்கள் தொடர்வதில் தாமதம் ஏற்பட்டது.

அப்போது நடந்த வாதங்கள் விவரம் வருமாறு:

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்: நீதிமன்றத்தில் அமைதியான சூழல் நிலவ வேண்டும்; கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும். மொத்தம் 143 மனுக்களில் எங்களுக்கு 60 மனுக்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எங்களுக்கு கொடுக்கப்பட்ட மனுக்களுக்கான பதில் மனு தயாராக உள்ளது.

தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே: இந்த விவகாரம் தொடர்பாக ஏன் அனைவரும் மனு தாக்கல் செய்கின்றனர் என்ற காரணத்தை அறிய முடியவில்லை.

இது தொடர்பாக ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். மனுக்கள்  அனைத்தையும் விசாரிக்காமல், ஒருதலைபட்சமான உத்தரவை பிறப்பிக்கப்போவதில்லை.

மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில்சிபல்: இவ்வழக்கை அரசியல் சாசன அமர்விற்கு மாற்ற வேண்டும்.

என்பிஆர் கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் முதல் நடைபெறவுள்ளது, எனவே அதற்கு முன்பு உரிய உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்.

தலைமை நீதிபதி:  குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க முடியாது.  

மற்றொரு மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சிங்வி:  பல மாநிலங்களில்  என். பி. ஆர் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளதால் இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்.

குடியுரிமை சட்ட நடைமுறைகளை குறைந்தபட்சம் 2 மாதமாவது ஒத்திவைக்க வேண்டும்.

தலைமை நீதிபதி:  காரணம் இல்லாமல் அரசின் திட்டங்களுக்கு தடைக்கோர முடியாது.

மத்திய அரசின் வழக்கறிஞர்: குடியுரிமை சட்ட நடைமுறைகளை தள்ளி வைப்பது என்பது சட்டத்துக்கே தடை விதிப்பது போன்றது; எனவே நடைமுறைகளை தள்ளி வைக்கக்கூடாது.



தலைமை நீதிபதி: வழக்கை இரண்டு வாரம் கழித்து ஏன் விசாரிக்க கூடாது?

மூத்த வழக்கறிஞர் சிங்வி: உத்தரபிரதேசத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு விதிகளை வகுக்காமல் மக்களை சந்தேகத்திற்குரிய குடிமக்கள் என்று குறிப்பிடத்  தொடங்கியுள்ளது.

மத்திய அரசு வழக்கறிஞர்: இன்னும் 80 சிஏஏ மனுக்களுக்கு பதிலளிக்க வேண்டும்.

6 வாரங்கள் அவகாசம் தேவைப்படும்.

தலைமை நீதிபதி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது.

4 வாரங்களில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். மீதமுள்ள அனைத்து மனுக்களுக்கும், நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பும்.

5 வாரங்களுக்கு பின் இவ்வழக்கு விசாரிக்கப்படும். இவ்வழக்கு தொடர்பாக, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்.

5 நீதிபதிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.



குடியுரிமை திருத்த சட்ட வழக்கு தொடர்பாக பல்வேறு மாநில  உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளுக்கு எதிராக எவ்வித இடைக்கால உத்தரவும் ஐகோர்ட் பிறப்பிக்க கூடாது. இவ்வாறு விவாதம் நடந்தது.

.

மூலக்கதை