5,100 கோடிக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

தினகரன்  தினகரன்
5,100 கோடிக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

புதுடெல்லி: ராணுவத்துக்கு ரூ.5,100 கோடி அளவுக்கு உள்நாட்டில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புத்துறை கொள்முதல் குழு கூட்டம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள பிபின் ராவத் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். ராவத் முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து நடைபெறும் முதல் கொள்முதல் குழு கூட்டம் இதுவாகும். இதில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்களை ராணுவத்துக்கு கொள்முதல் செய்ய  ரூ.5,100 கோடியை பாதுகாப்புத்துறை கொள்முதல் குழு அனுமதித்துள்ளது. இதைக்கொண்டு பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ள அதிநவீன எலக்ட்ரானிக் போர்தளவாடங்கள் ெகாள்முதல் செய்யப்படும். இதுதவிர கடற்படைக்கு 6 நீர்மூழ்கி கப்பல்களை கட்டமைப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர போர் விமானங்களை உற்பத்தி செய்யவும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை