ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் வீடுகள் கணக்கெடுப்பு பணியின் போதே என்பிஆர் விவரங்களும் சேகரிக்கப்படும்: மக்கள்தொகை ஆணையர் திடீர் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் வீடுகள் கணக்கெடுப்பு பணியின் போதே என்பிஆர் விவரங்களும் சேகரிக்கப்படும்: மக்கள்தொகை ஆணையர் திடீர் அறிவிப்பு

புதுடெல்லி:  ‘தேசிய வீடுகள் கணக்கெடுப்பு பணியின்போதே, தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கான விவரங்கள் சேகரிக்கப்படும்,’ என மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில், அடுத்தக்கட்டமாக என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு, என்ஆர்சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டங்களையும், தேசிய வீடுகள் கணக்கெடுப்பு திட்டத்தையும் அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு, எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை மட்டும் இப்போதைக்கு நடத்த மாட்டோம் என மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது. இந்நிலையில், வீடுகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் -1948ன்படி மக்களின் விவரங்கள் ரகசியமானது. இந்த சட்டவிதிகளை மீறினால் கணக்கெடுப்பு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகள் கணக்கெடுப்பு பணியின் போதே, தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கான விவரங்களும் சேகரிக்கப்படும். 2021ம் ஆண்டுக்கான வீடுகள் கணக்கெடுப்பு பணி வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை நடைபெறும்,’ என கூறியுள்ளார்.  அதேபோல், டெல்லியில் மத்திய இணையமைச்சர் கிஷ்ண் ரெட்டி நேற்று அளித்த பேட்டியில், ‘‘தேசிய மக்கள்தொகை பதிவேடு ஒரு அரசியலமைப்பு கடமை. இதற்கான விவரங்களை மக்கள் விருப்பப்பட்டால் கூறலாம்,’’ என்றார்.

மூலக்கதை