உணவு பற்றாக்குறையால் எலும்பும் தோலுமான சிங்கங்கள்: காண சகிக்காத காட்சிகளால் மக்கள் வேதனை

தினகரன்  தினகரன்
உணவு பற்றாக்குறையால் எலும்பும் தோலுமான சிங்கங்கள்: காண சகிக்காத காட்சிகளால் மக்கள் வேதனை

கார்டோம்: சூடானில் உணவுப் பற்றாக்குறையால் சிங்கங்கள் எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கின்றன. சோமாலியா என்றாலே நினைவுக்கு வருவது எலும்பும், தோலுமான மக்கள்தான். உலக நாடுகள் கைக்கொடுத்ததால் கடும் போராட்டத்துக்கு பின்னர் அந்நாட்டு மக்கள் தற்போது ஓரளவுக்கு முன்னேறி உள்ளனர். ஆனால், இன்னமும் நிலைமை அங்கு பெரிய அளவில் மாறிவிடவில்லை. அதேபோன்ற சூழ்நிலை, தற்போது சூடானிலும் நிலவுகிறது. இங்கு பொருளாதார வீழ்ச்சியால் உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது. பொதுமக்களும் உணவுப் பொருட்களுக்கு பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், சூடான் தலைநகர் கார்டோமில் உள்ள அல் குரேஷி உயிரியல் பூங்காவில் சிங்கங்களின் நிலை மிக மோசம் அடைந்துள்ளது. இந்த பூங்காவை நிர்வகிக்க கார்டூம் மாநகராட்சி நிர்வாகத்தால் போதிய அளவு நிதி வழங்கப்படவில்லை. மேலும், தனியார் நன்கொடையாளர்கள் மூலமும் பூங்காவிற்கு வந்துக் கொண்டிருந்த நிதியும் நின்று விட்டது. விளைவு, அங்குள்ள சிங்கங்களுக்கு போதிய உணவு அளிக்கப்படவில்லை.இதன் காரணமாக சிங்கங்கள் எலும்பும், தோலுமாக மாறி பரிதாபமாக உள்ளன. காட்டு ராஜாக்களான சிங்கங்களின், எலும்புகள் தோலை துருத்திக் கொண்டு அப்பட்டமாக வெளியே தெரிகின்றன.  சிங்கங்களுக்கு போதுமான அளவு மாமிசம் கொடுப்பதற்கு நிதி தரப்படாத நிலையில், ஊழியர்கள் பரிதாபப்பட்டு தங்கள் சொந்த பணத்தில் இருந்து அவற்றுக்கு ஓரளவுக்கு உணவு அளித்து வருகின்றனர். இந்த சிங்கங்களையும், விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் என்று இப்போது இணையதளத்தில் புதிய பிரசாரம் தொடங்கி உள்ளது. குறைந்தபட்சம் இந்த சிங்கங்களை காட்டு–்ப்பகுதிக்கு சென்று விடுவித்தாலாவது அவையே தங்கள் உணவை தேடிக் கொள்ளும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மூலக்கதை