குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: பாஜ கூட்டணியில் சிரோமணி விலகல்... டெல்லி தேர்தலில் தனித்து போட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: பாஜ கூட்டணியில் சிரோமணி விலகல்... டெல்லி தேர்தலில் தனித்து போட்டி

புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜ தலைமையிலான கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலி தளம் விலகி உள்ளது. டெல்லி பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனா, அதிமுக, ஐக்கிய ஜனதா தளம், சிரோமணி அகாலி தளம், லோக் ஜனசக்தி கட்சி, அசாம் கன பரிஷத், அப்னா தளம் (சோனேலால்) உள்ளிட்ட 14 கட்சிகள் இருந்தன. அதில் சிவசேனா கட்சி நடந்து முடிந்த மகாராஷ்டிரா தேர்தல் முடிவில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து அம்மாநிலத்தில் ஆட்சி நடத்தி வருகிறது.



இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தால், நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வரும்நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றன.

அந்த வகையில், சிரோமணி அகாலிதளம் ‘டெல்லி சட்டப் பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை’ என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டில்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய எஸ்ஏடி தலைவர் மஞ்சீந்தர் சிங் சிர்சா, ‘‘குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பாஜகவுடனான மூன்று சந்திப்புகளின் போதும், ​​சிஏஏ குறித்த நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு எங்களது கட்சி கேட்டுக் கொண்டது.

ஆனால், பாஜக செவிசாய்க்கவில்லை. சிரோமணி அகாலிதளம், குடியுரிமை திருத்த சட்டத்தினால் முஸ்லிம்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. நாட்டை மதத்தின் அடிப்படையில் பிரிக்க முடியாது.



எங்கள் நிலைப்பாட்டை மாற்றுவதை விட தனித்து தேர்தலில் போட்டியிட விரும்புகிறோம்’’ என்றார். கடந்த 2015ம் ஆண்டு ெடல்லி சட்டப்பேரவை தேர்தலில் ராஜோரி கார்டன், ஹரி நகர், ஷாஹத்ரா மற்றும் கல்காஜி ஆகிய நான்கு இடங்களில் சிரோமணி அகாலிதளம் போட்டியிட்டது.

இவர்களில், இருவர் தங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிட்டனர். இருப்பினும் அவர்கள் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை.

ஆனால், இந்த முறை சிரோமணி அகாலி தளம் கட்சிக்கு, மூன்று இடங்களை பெற்றுக் கொள்ள பாஜக வற்புறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், பிப்.

8ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை எதிர்கொள்ளும் நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு இரண்டு இடங்களையும், டெல்லியில் உள்ள லோக் ஜனசக்தி கட்சிக்கு (எல்ஜேபி) ஒரு இடத்தையும் பாஜக ஒதுக்கி உள்ளது.

.

மூலக்கதை