மண்டல, மகர விளக்கு காலம் நிறைவு: சபரிமலையில் நடை சாத்தப்பட்டது

தமிழ் முரசு  தமிழ் முரசு
மண்டல, மகர விளக்கு காலம் நிறைவு: சபரிமலையில் நடை சாத்தப்பட்டது

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று காலை நடை சாத்தப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மகர விளக்கு கால பூஜை கடந்த டிசம்பர் 31ம் தேதி தொடங்கியது.

பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை ஜனவரி 15ம் தேதி நடந்தது. அன்று மாலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரிந்தது.

லட்சக்கணக்கான பக்தர்கள் மகர ஜோதியை தரிசித்தனர். இந்த நிலையில் இந்த வருட மகர விளக்கு கால பூஜைகள் நேற்றுடன் (20ம் தேதி) நிறைவடைந்தது.முன்னதாக 19ம் தேதி வரை ெநய் அபிஷேகம் நடந்தது. நேற்று இரவு வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர், மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி ஆகியோர் அஷ்டாபிஷேகம் நடத்தினர்.

தொடர்ந்து திருவாபரணம் பெட்டகங்களில் வைக்கப்பட்டு பந்தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதை தொடர்ந்து பந்தளம் மன்னர் பிரதிநிதி பிரதீப்குமார் வர்மா ஐயப்பனை தரிசனம் செய்தார்.

இவர் தரிசனம் செய்யும் போது ஊழியர்கள் உள்பட வேறு யாரும் அங்கு இருக்க கூடாது என்பதால் அனைவரும் கோயில் வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் அவர் சாமிதரிசனம் செய்தார்.

அதன்பிறகு மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி 6. 45 மணிக்கு நடையை சாத்தினார். பின்னர் 18ம் படிக்கு கீழ் வைத்து கோயில் சாவியையும், பண முடிப்பையும் பந்தளம் மன்னர் பிரதிநிதியிடம் மேல்சாந்தி வழங்கினார்.

அப்போது அடுத்த ஒரு வருடத்துக்கு பூஜை நடத்த ேவண்டும் என்று கூறி கோயில் சாவியையும், அதற்கான பண முடிப்பையும் மேல்சாந்தியிடம் மன்னர் பிரதிநிதி திரும்ப ஒப்படைத்தார். அதன் பிறகு அவர் பந்தளத்துக்கு புறப்பட்டு சென்றார்.

இன்றுடன் மண்டல, மகர விளக்கு காலம் நிறைவடைந்தது.

மீண்டும் மாசி மாத பூஜைகளுக்கு பிப்ரவரி 13ம் தேதி மாலை நடை திறக்கப்படும். கடந்த 14ம் தேதி வரை கோயில் வருமானம் ரூ. 234 கோடியை தாண்டியுள்ளது.

அதன் பிறகு நேற்று வரை கிடைத்த வருமானம் குறித்து கணக்கெடுக்கவில்லை.

கடந்த வருடம் மண்டல, மகர விளக்கு காலத்தின்போது ரூ. 167 கோடி மட்டுமே வருமானம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை