அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி மார்ச் மாதம் 25ம் தேதி தொடக்கம்: பிப்ரவரி 9ம் தேதிக்குள் அறக்கட்டளை நிறுவ முடிவு

தினகரன்  தினகரன்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி மார்ச் மாதம் 25ம் தேதி தொடக்கம்: பிப்ரவரி 9ம் தேதிக்குள் அறக்கட்டளை நிறுவ முடிவு

லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி மார்ச் மாதம் 25ம் தேதி தொடங்குகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இதற்கான அறக்கட்டளை வருகின்ற பிப்ரவரி 9ம் தேதிக்குள் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ள அதிகாரிகள் அடங்கிய குழு ஆய்வு செய்து வருகிறது. ராமர் கோவில் அறக்கட்டளை நிறுவப்பட்டதும் ராம நவமியையொட்டி மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதிக்குள் கோயில் கட்டுமான பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக கோவிலின் வடிவமைப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் வழங்குவார். பாபர் மசூதி, ராமஜென்ம பூமி நில வழக்கில், கடந்த நவம்பர் 9ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டி கொள்ளலாம் என்றும் இதற்காக 3 மாதத்துக்குள் அறக்கட்டளையை நிறுவ வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இதை தொடர்ந்து, மசூதி கட்ட சன்னி வக்பு வாரியத்துக்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அயோத்தி தீர்ப்பின் அம்சங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மத்திய உள் துறை அமைச்சகம், அதிகாரிகள் குழுவை அமைத்தது. அக்குழு அறக்கட்டளையை நிறுவுவதற்கான பணிகளை செய்து வருகிறது. இதனிடையே, உச்ச நீதிமன்றத்தின் 3 மாத கெடு வருகின்ற பிப்ரவரி 9ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்குள் ராமர் கோயில் அறக்கட்டளை நிறுவப்படும் எனத் தெரிகிறது. ராமர் கோயில் அறக்கட்டளை, கோயில் கட்டுமானத்துக்காக நாடு முழுவதிலும் இருந்து நன்கொடை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து உத்திரபிரதேச அரசு மசூதி கட்டுவதற்காக 4 இடங்களை தேர்வு செய்து மத்திய அரசுக்கு ஏற்கனவே அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை