தழைத்தோங்கும் மதநல்லிணக்கம் மசூதியில் இந்து முறைப்படி திருமணம்: கேரளாவில் நெகிழ்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தழைத்தோங்கும் மதநல்லிணக்கம் மசூதியில் இந்து முறைப்படி திருமணம்: கேரளாவில் நெகிழ்ச்சி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், காயங்குளம் அருகே சேராப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அசோகன். இவரது மனைவி பிந்து.

இவர்களுக்கு அஞ்சு என்ற மகள் உள்ளார். கூலி தொழிலாளியான அசோகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்.

இதனால் பிந்து வறுமையால் வாடினார். இந்தநிலையில் தனது மகள் அஞ்சுவின் திருமணத்தை நடத்தவேண்டிய கட்டாயத்தில் பிந்து இருந்தார்.

ஆனால் பட்டதாரியான அஞ்சுவிற்கு திருமணம் தள்ளி போய் கொண்டே இருந்தது. பிந்துவின் உறவினர்களின் ஆலோசனைபடி, அப்பகுதியில் உள்ள ஜூம்மா மசூதி நிர்வாகிகளிடம் பிந்து ஒரு மனு அளித்தார்.



அதில், ‘’தனது மகள் அஞ்சுவிற்கு திருமணம் நடத்த போதிய பண வசதி இல்லை. தாங்கள் திருமணத்தை நடத்தி தரும்படி வேண்டுவதாக குறிப்பிட்டிருந்தார்.

இதை பரிசீலித்த நிர்வாகிகள், பிந்துவை அழைத்து அஞ்சுவிற்கு வரன்பார்க்கும் படி தெரிவித்தனர். அத்துடன் மசூதி சார்பில் 10 பவுன் நகையும், ரூ. 2 லட்சம் வரதட்சணையாக கொடுப்பதாகவும், திருமண செலவுகளை மசூதி நிர்வாகிகள் ஏற்று கொள்வதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த சரத்துக்கும் அஞ்சுவிற்கு நேற்று சேராப்பள்ளி ஜூம்மா மசூதி வளாகத்தில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.

அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் முழங்க உறவினர்கள் புடைசூழ திருமணம் இனிதாக நடைபெற்றது.

திருமணத்துக்கு வந்தவர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

திருமண உணவுக்கான செலவினை ஜூம்மா மசூதி செயலாளர் நிஜூமுதீன் தலைமையிலான நிர்வாகிகள் ஏற்றிருந்தனர்.

ஜூம்மா மசூதி வளாகத்தில் இந்து முறைப்படி நடந்த திருமணம் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக அமைந்து விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

.

மூலக்கதை