அரச குடும்பத்தில் இருந்து விலகுவதை தவிர வழியில்லை: மனம் திறந்த ஹாரி

தினகரன்  தினகரன்
அரச குடும்பத்தில் இருந்து விலகுவதை தவிர வழியில்லை: மனம் திறந்த ஹாரி

லண்டன்: அரச குடும்பத்தில் இருந்து விலகுவதை தவிர வேறு வழியில்லாததால் இத்தகையை முடிவை எடுத்ததாக, இங்கிலாந்து முன்னாள் இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார். இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பேரனும் சார்லஸ்-டயானாவின் இளைய மகனுமான இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகப் போவதாக சமீபத்தில் அறிவித்தனர். முக்கிய குடும்ப உறுப்பினர்களுடன் ராணி எலிசபெத் ஹாரி-மேகன் முடிவு குறித்து அவசர ஆலோசனை நடத்தினார். எனினும், ஹாரி-மேகன் தம்பதியினர் தங்களது முடிவில் உறுதியாக இருந்தனர். இதனால், அவர்கள் அரச குடும்பத்தில் இருந்து பிரிந்து செல்ல ராணி எலிசபெத் அனுமதி அளித்தார். கடந்த சனியன்று, ராணி எலிசபெத் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஹாரி-மேகன் தம்பதியினர் இனி அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளாக கருதப்பட மாட்டார்கள், அரச கடமைகளுக்காக அவர்கள் இனி பொது நிதியை பெற மாட்டார்கள்’’ என்று கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டுவதற்காக லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் ஹாரி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அரச குடும்பத்தில் இருந்து விலகுவகு குறித்து ஹாரி கூறியதாவது: எனக்காகவும், எனது மனைவிக்காகவும் நான் இந்த முடிவை எடுத்தேன். இது மிக எளிதாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. பல சவால்களை எதிர்கொண்ட பின் பல மாதங்களான நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் தான் இந்த முடிவை எடுத்தோம். நான் எப்போதுமே சரியான முடிவை எடுப்பதில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் இப்போது இதனை தவிர வேறு வழியில்லை. நாங்கள் விலகி செல்லவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் நிச்சயமாக உங்களிடம் இருந்து விலகி செல்லவில்லை. இங்கிலாந்து தான் எனது தாய் வீடு. அரண்மனையை நான் நேசிக்கிறேன். அது எப்போதும் மாறாது. எனக்கும் மேகனுக்கும் திருமணம் நடந்தவுடன் நாங்கள் மிகுந்த உற்சாகமுடன் இருந்தோம்.  நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், பின்னால் ஏற்பட்ட சம்பவங்கள் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ராணி, காமன்வெல்த் மற்றும் எனது ராணுவ பிரிவுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது நம்பிக்கையாக இருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அது சாத்தியமாகவில்லை. நான் இந்த முடிவை ஏற்றுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை