பிப். 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்: ‘அல்வா’ விழாவுடன் ஆவணம் அச்சிடும் பணி தொடங்கியது... மத்திய நிதி அமைச்சகத்தில் இன்று சுறுசுறுப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிப். 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்: ‘அல்வா’ விழாவுடன் ஆவணம் அச்சிடும் பணி தொடங்கியது... மத்திய நிதி அமைச்சகத்தில் இன்று சுறுசுறுப்பு

புதுடெல்லி: பிப். 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ‘அல்வா’ விழாவுடன் ஆவணங்கள் அச்சிடும் பணி இன்று ெதாடங்கியது.

இதனால் மத்திய நிதி அமைச்சகத்தில் அதிகாரிகள் சுறுசுறுப்புடன் இருந்தனர். ஒவ்வொரு முறையும் மத்திய பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடுதல் பணி துவங்குவதற்கு முன்பாக ‘அல்வா’ விழாவை மத்திய நிதி அமைச்சக அலுவலக அதிகாரிகள் செய்வர்.

ஒரு பெரிய பாத்திரத்தில் ‘அல்வா’ தயாரிக்கப்பட்டு அமைச்சகத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் அல்வா வழங்கப்படும். முறைப்படி அனைவருக்கும் அல்வா பரிமாறப்பட்டு சாப்பிட்டவுடன், பட்ஜெட் தயாரித்தல் மற்றும் அச்சிடும் பணிகள் சுறுசுறுப்பாக தொடங்குவது வழக்கம்.

முன்னதாக, பட்ஜெட் தயாரிப்பில் நேரடியாக தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் ஆதரவு ஊழியர்கள் அமைச்சகத்தில்தான் தங்க வேண்டும். பிப்.

1ம் தேதி மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை அவர்களது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியாது.

பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடுதல் தொடங்கியதும், நிதி அமைச்சகத்திற்குள் பூட்டப்பட்டிருக்கும் பணியாளர்கள் வெளி உலகத்துடன், அவர்களது குடும்பத்தினருடன் கூட எந்த வகையிலும் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. நிதி அமைச்சகத்தின் மிக மூத்த அதிகாரிகள் மட்டுமே வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

செப்டம்பர் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி ஆறரை ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதால், பட்ஜெட்-2020 இந்திய பொருளாதாரத்திற்கு சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நடப்பு நிதியாண்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5 சதவீதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நுகர்வோர் தேவை மற்றும் உலகளாவிய மந்தநிலை ஆகியவற்றால் பொருளாதாரம் கடந்த சில மாதமாக வீழ்ச்சியை நோக்கி செல்கிறது. கார்ப்பரேட் வரி குறைப்பு, பொதுத்துறை வங்கித் துறையில் இதுவரை கண்டிராத வகையில் சலுகை ஆகிய அறிவிப்பால், கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.



இத்தனைக்கும் இடையே, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப். 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் முன், நாடாளுமன்ற கூட்டத் தொடர் ெதாடங்கும் நாளான வரும் 31ம் தேதி ஆண்டு நிதி அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.

இந்நிலையில், தற்போது பட்ஜெட் ஆவணங்களின் அச்சிடுதல் பணி அதிகாரபூர்வமாக தொடங்கி உள்ளதால், மத்திய பட்ஜெட்  2020ம் ஆண்டுக்கான ‘கவுன்ட்டவுன்’ இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய நிதி அமைச்சகத்தின் வடக்கு பிளாக்கில் இன்று நடைபெறும் பாரம்பரிய ‘அல்வா’ விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிற நிதி அமைச்சக  அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

அதனால், நிதி அமைச்சகம் இன்று சுறுசுறுப்புடன் காணப்பட்டது.

.

மூலக்கதை