பாஜக நடத்திய சிஏஏ ஆதரவு பேரணியில் பெண் துணை ஆட்சியரின் முடியைப் பிடித்து இழுத்ததால் பரபரப்பு

தினகரன்  தினகரன்
பாஜக நடத்திய சிஏஏ ஆதரவு பேரணியில் பெண் துணை ஆட்சியரின் முடியைப் பிடித்து இழுத்ததால் பரபரப்பு

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு  ஆதரவாக பாஜகவினர் நடத்திய பேரணியில்,  போராட்டக்காரர் ஒருவர் பெண் துணை ஆட்சியரின் முடியைப் பிடித்து இழுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியாவில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேசமயம் குடியுரிமை திருத்தச் சட்டம் தவறாக பரப்பட்டு வருவதாகவும், அதன் உண்மை நிலை குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும் பாஜக தலைமை வலியுறுத்தியதால் பாஜகவினர் ஆங்காங்கே சிஏஏ ஆதரவு போராட்டம் நடத்தி வருகின்றனர்.அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கார் மாவட்டத்தில் உள்ள பியோவோரா பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பேரணி நடத்த பாஜக திட்டமிட்டிருந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாக செல்ல முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துணை ஆட்சியர் பிரியா வர்மா, போராட்டக்காரர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். மேலும் பாஜகவைச் சேர்ந்த ஒருவரை கண்ணத்தில் அடித்தார். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் பிரியா வர்மாவை முற்றுகையிட்டனர்.நெரிசலில் சிக்கிய துணை ஆட்சியரை மீட்க முயற்சிக்கும்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் பிரியா வர்மாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்த வீடியோவும் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மூலக்கதை