மறக்க முடியுமா... அலிபாபாவும் 40 திருடர்களும்

தினமலர்  தினமலர்
மறக்க முடியுமா... அலிபாபாவும் 40 திருடர்களும்

படம்: அலிபாபாவும் 40 திருடர்களும்
வெளியான ஆண்டு: 1955
நடிகர்கள்: எம்.ஜி.ஆர்., பானுமதி, பி.எஸ்.வீரப்பா
இயக்கம்: டி.ஆர்.சுந்தரம்
தயாரிப்பு: மாடர்ன் தியேட்டர்ஸ்

அரேபிய கதைகளில் இருந்து, ஒரு கதையை எடுத்து, திரைப்படமாக மாற்றியிருப்பர். தென்மாநிலத்தின் முதல் முழு நீள வண்ணப்படம். 'கேவா கலர்' என்ற தொழில்நுட்பத்தில் வெளியானது.

மரவெட்டி அலிபாபாவிடம், பாக்தாத் நடன அழகி மார்சியானா அடைக்கலம் புகுந்து, காதலியாகிறாள். ஒரு நாள், அலிபாபா, மரம் வெட்ட செல்லும் போது, கொள்ளையர்களின் குகையையும், அதை திறப்பதற்கான ரகசிய சொற்களையும் அறிந்து கொள்கிறார். கொள்ளையர் சென்ற பின், அலிபாபா, குகையில் இருக்கும் செல்வத்தில், சிறிதளவு எடுத்துச் சென்று, ஏழைகளுக்கு உதவுகிறார். அலிபாபா, செல்வந்தன் ஆகிறார்.

பேராசை உடைய, அலிபாபாவின் அண்ணன் காசிம், ரகசியம் அறிந்த பின், குகைக்குள் சென்று சிக்கி, கொள்ளையரால் கொல்லப்படுகிறான். இதையடுத்து அலிபாபாவை, கொள்ளையர் கூட்டம் தேடுகிறது. அவர்களின் திட்டத்தை, மார்சியானாவும், அலிபாபாவும் முறியடிக்கின்றனர். சுவாரஸ்யமும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாத கதை. குகையை திறக்க பயன்படுத்தும், 'அண்டா ஹாஹசம் அபூஹா ஹுசேம்' வார்த்தைகள், இன்றும் பிரபலம்.

அலிபாபாவாக, எம்.ஜி.ஆரும்; அவரின் அண்ணனான, காசிம் கதாபாத்திரத்தில், எம்.ஜி.சக்கரபாணி நடித்திருப்பார். நிஜத்திலும் இவர், எம்.ஜி.ஆரின் அண்ணன். மார்சியானா கதாபாத்திரத்தில், பானுமதி பிரமாதப்படுத்தியிருப்பார். அலிபாபாவை, பல சந்தர்ப்பங்களில் காக்கும், ஹீரோயின் கதாபாத்திரம். கொள்ளையர் தலைவன், அபு ஹுசேன் கதாபாத்திரத்தில், பி.எஸ்.வீரப்பா மிரட்டியிருப்பார். அவரது குரலும், நடித்திருக்கும். படத்தில் இடம்பெறும் குகைக்காக, 40 திருடர்களும் குதிரையில் போகக்கூடிய அளவுக்கு, மைசூரில் பிரமாண்டமான, இரண்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டன.

மதுரகாசி எழுதிய பாடல்களுக்கு, சுஸர்லா தட்ஷிணாமூர்த்தி இசை அமைத்தார். 'மாசிலா உண்மை காதலி, அழகான பொண்ணு நான்...' உள்ளிட்ட பாடல்கள், சூப்பர் ஹிட். இந்த படத்தில் சில காட்சிகளில் நடிக்க, எம்.ஜி.ஆர்., தாமதமாக வந்ததால், டி.ஆர்.சுந்தரம், 'டூப்' வைத்து படத்தை எடுத்து முடித்தார். அதை கண்டுபிடிக்க முடிகிறதா என, மீண்டும் அந்த படத்தை பாருங்கள். இந்த அலிபாபா கதை, இதற்கு முன், 1941ல், என்.எஸ்.கிருஷ்ணன் நடிப்பில், வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போதும், 'ரீமேக்' செய்யலாம்!

மூலக்கதை