ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..: பாதுகாப்பு படையினர் அதிரடி

தினகரன்  தினகரன்
ஜம்முகாஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..: பாதுகாப்பு படையினர் அதிரடி

புல்வாமா: ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்த அரசியமைப்புச் சட்ட விதி 370 கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள வச்சி கிராமத்தில், 2 முதல் 3 பயங்கரவாதிகள் வரை பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, இந்திய ராணுவத்தின் 55வது ராஷ்டிரிய ரைஃபில்ஸ் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு குழுவினரும் இணைந்து அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அப்போது, அங்கிருந்த வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் இருவர் அடில் ஷேக் மற்றும் வசிம் வனி என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், மூன்றாவது நபர் யார் என்பதை அறிய போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கிடையில், தீவிரவாதிகள் வசமிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை