வலுவான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது மகிழ்ச்சி: இந்திய கேப்டன் விராட் கோஹ்லி பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
வலுவான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது மகிழ்ச்சி: இந்திய கேப்டன் விராட் கோஹ்லி பேட்டி

பெங்களூரு: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கடைசி போட்டி நேற்று பெங்களூருவில் நடந்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக  ஸ்டீவன் ஸ்மித் 132 பந்தில் 14 பவுண்டரி , ஒரு சிக்சருடன் 131 ரன் எடுத்தார். லபுஸ்சேன் 54,அலக்ஸ் கேரி 35ரன் எடுத்தனர்.

இந்திய தரப்பில் முகமது ஷமி 4, ஜடேஜா2, சைனி,குல்தீப் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பின்னர் 287 ரன் இலக்கை துரத்திய இந்திய அணியில் கே. எல். ராகுல் 19  ரன்னில் வெளியேற ரோகித்சர்மா 119 ரன் (128 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்) , கோஹ்லி 89 ரன் (91பந்து,8 பவுண்டரி) எடுத்தனர்.

47. 3 ஓவரில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ்   ஐயர் 44, மணிஷ்பாண்டே 8 ரன்னில் களததில் இருந்தனர்.

இந்த வெற்றி மூலம் 2-1 என இந்தியாதொடரை வென்றது.

ரோகித்சர்மா ஆட்டநாயகன் விருதும், விராட் கோஹ்லி தொடர் நாயகன் விருதும் பெற்றனர். வெற்றிக்கு பின் இந்திய கேப்டன்  விராட் கோஹ்லி கூறியதாவது: 2020ம் ஆண்டை மிகச்சிறப்பாக தொடங்கி உள்ளோம்.

வலுவான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது மகிழ்ச்சி. இதனை தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறோம்.

தவான் இல்லாத நிலையில் ராகுல் விரைவில் ஆட்டம் இழந்தார். இதனால் ரோகித்தும், நானும் நிலைத்து நிற்கவேண்டிய கட்டாயம் இருந்தது.

ரோகித்துடன் பேட்டிங் செய்வது சுவாரஸ்யமானது. கடந்த 4,5 ஆண்டுகளில் நாங்கள் இப்படித்தான் விளையாடியுள்ளோம்.

அனுபவம் உதவுகிறது. ஸ்டார்க் பந்தை எதிர்கொள்வதற்காக நிறைய பயிற்சி செய்தோம்.

கடந்தமுறையை விடவும் இது திருப்திகரமான வெற்றி. ஏனெனில் எதிரணியில் ஸ்மித், வார்னர் உள்ளனர்.



கடந்த முறை 2-0 என முன்னிலையில் இருந்தும் பின்னர் தொடரை இழந்தோம். ஆனால் இந்த முறை முதல் போட்டியில் தோற்றாலும் பின்னர் தொடரை வென்றுள்ளோம், லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பதன் மூலம் பேட்டிங்கை வலுப்படுத்தும் வகையில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்க்க முடிகிறது.

இது மிகவும் முக்கியமான ஒன்று, என்றார். ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், 300 முதல் 310 ரன்கள் வரை எடுத்திருக்க வேண்டும்.

அப்படி எடுத்திருந்தால் ஆட்டம் எங்கள் வசம் வந்திருக்கும். உலகின் தலைசிறந்த அணிக்கு எதிராக விளையாடுவது சிறந்த கற்றல் அனுபவமாகும்.

எல்லோரும் சிறப்பாக ஆடினர். மொத்தத்தில் இது ஒரு சிறந்த தொடராக இருந்தது.

என்றார்,

பிட்ஸ். . . பிட்ஸ். . பிட்ஸ்.
* விராட் கோஹ்லி கேப்டனாக அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் டோனியை முந்தினார்.

நேற்று 89 ரன் எடுத்த அவர் டெஸ்ட், ஒன்டே, டி. 20 என அனைத்தும் சேர்த்து 199 இன்னிங்சில் 11,208 ரன் குவித்துள்ளார். டோனி 330 இன்னிங்சில் 11,207 ரன் எடுத்துள்ளார்.


* கோஹ்லி நேற்று 14 ரன் எடுத்த போது, கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன் குவித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். 82 ஆட்டங்களில் அவர் இதனை எட்டிஉள்ளார் டோனி 127, ரிக்கிபாண்டிங் 131 போட்டியிலும் 5 ஆயிரம் ரன் எடுத்துள்ளனர்.
* ஒரு நாள் கிரிக்கெட்டில் ரோகித்சர்மா 29வது சதத்தை அடித்தார்.

அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஜெயசூர்யாவை பின்னுக்கு தள்ளி 4வது இடத்துக்கு முன்னேறினார். தெண்டுல்கர் 49 கோஹ்லி 43, ரிக்கிபாண்டிங் 30 சதம் எடுத்துள்ளனர்.

* ரோகித் சர்மா 4 ரன் எடுத்த போது ஒரு நாள் போட்டியில் 9 ஆயிரம் ரன்னை தொட்டார்.

217 இன்னிங்கில் அவர் இதனை எட்டியுள்ளார். கோஹ்லி 194, ஏ. பி. டிவில்லியர்ஸ் 205 இன்னிங்சில் 9 ஆயிரம் ரன் எடுத்துள்ளனர்
* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் 8வது சதம் அடித்துள்ளார்.

சச்சின் ஆஸி. க்கு எதிராகவும்,, கோஹ்லி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவும் தலா 9 சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளனர்.
* ஒன்டேவில் கோஹ்லி-ரோகித் 18வது முறையாக பார்ட்னர் ஷிப்பில் 100 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். கங்குலி-சச்சின் ஜோடி 26 முறை 100பிளஸ் ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளது.

290 ரன்னுக்குள் ஆஸி. யை கட்டுப்படுத்தியது சிறப்பு
ஆட்டநாயகன் விருது பெற்ற ரோகித்சர்மா அளித்த பேட்டி: ஆஸ்திரேலியாவை 290ரன்னுக்கு கீழ் கட்டுப்படுத்தியது மிகச்சிறந்த முயற்சி. கே. எல். ராகுல் வெளியேறியதும், எங்களில் ஒருவர் (கோஹ்லி) கடைசிவரை களத்தில் நின்றக வேண்டும் என பேசிக்கொண்டோம். வாய்ப்புக்களை நான் எடுத்துக்கொண்டு அதிரடியாக ஆடுகிறேன் என கோஹ்லியிடம் தெரிவித்தேன்.

எங்கள் பார்ட்னர் ஷிப் எப்போதும் நன்றாக இருக்கும். நாங்கள் நடுவில் விக்கெட்டை இழந்திருந்தால் வித்தியாசமாக இருந்திருக்கும்.

ஆஸி. எப்போதும் நல்ல பந்து வீச்சு தாக்குதல் உள்ள அணி.

அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்கள் சவால் விடுவார்கள். முதல் 2 போட்டியில் வித்தியாசமாக ஏதாவது செய்ய முயற்சித்தேன்.

ஆனால் அது வரவில்லை. இதனால்  இங்கு 35 ஓவர் வரையிலாவது ஆட விரும்பினேன்.

அது முடிந்தது, என்றார்.

.

மூலக்கதை