நவீன மயமாக்கப்பட்ட தஞ்சை விமானப்படைத்தளம் நாட்டுக்கு அர்ப்பணிப்பு: தலைமை தளபதி பிபின் ராவத் பங்கேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நவீன மயமாக்கப்பட்ட தஞ்சை விமானப்படைத்தளம் நாட்டுக்கு அர்ப்பணிப்பு: தலைமை தளபதி பிபின் ராவத் பங்கேற்பு

தஞ்சை: தஞ்சையில் 1940ம் ஆண்டு விமானப்படை தளம் அமைக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து விமானப்படையை சேர்ந்த விமானங்கள் தஞ்சை விமானப்படை தளத்தில் இருந்து இயக்கப்பட்டன.

சுதந்திரத்திற்கு பின்னர் இந்த விமானப்படை தளம் பயன்படுத்தப்படவில்லை.
பல ஆண்டுகளுக்கு பின்னர் இந்த தளத்தை சீரமைத்து சிறிய பயணிகள் விமானம் (வாயுதூத்) இயக்கப்பட்டது. 1988ம் ஆண்டு இங்கிருந்து சென்னைக்கு வாயுதூத் விமானம் இயக்கப்பட்டது.

பயணிகள் வருகை குறைந்ததால் விமான சேவை நிறுத்தப்பட்டது. தற்போது தஞ்சை நகரம் வளர்ந்து விட்டதாலும், காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த பலர் வெளிநாடுகளில் பணியாற்றுவதாலும் செப்டம்பர் மாதம் முதல் தஞ்சை, சென்னை இடையே விமானப்படை தளத்தின் ஒரு பகுதியில் இருந்து பயணிகள் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் தஞ்சை விமானப்படை தளத்தை அதிநவீன தொழில் நுட்பத்துடன் சுகோய் ரக போர் விமானங்கள் இங்கிருந்து இயக்குவதற்கு தேவையான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்தது.

கடந்த 2013ம் ஆண்டு தஞ்சை விமானப்படை தளத்தை அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ. கே. அந்தோணி தரம் உயர்த்தப்பட்ட விமானத் தளமாக அறிவித்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இங்கு சுகோய் 30 ரக போர் விமானத்திலிருந்து தரை இலக்கை நோக்கி பிரம்மோஸ் ஏவுகணை வீசும் சோதனை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி இங்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

தஞ்சை விமானப்படைத் தளத்தை மேலும் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் இங்கு சுகோய்30 ரக விமானங்களை கொண்ட ஒரு விமானப்படை நிரந்தரமாக நிறுவும் பணி நடந்து வந்தது.

இதற்காக கடந்த 6 ஆண்டுகளாக தஞ்சை விமானப்படை தளத்தில் இருந்து பல சுகோய் விமானங்கள் இயக்கி சோதிக்கப்பட்டன.

இந்திய விமானப்படையில் டைகர் ஷார்க்ஸ் என்ற 222வது போர் விமானப்படை பிரிவு 1969 செப்டம்பர் 15ல் தொடங்கப்பட்டது. அதில் வானில் இருந்து தரை இலக்கை தாக்கும் சுகோய் போர் விமானங்கள் இடம் பெற்றன.

2011ம் ஆண்டு 222வது படைப்பிரிவின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. சுகோய் போர் விமானங்களுடன் 222வது டைகர் ஷார்க்ஸ் படைப்பிரிவு புதுப்பிக்கப்படும் என 2020 புத்தாண்டு செய்தியாக விமானப்படை அறிவித்தது.

அத்துடன் தஞ்சை விமானப்படை தளம் 222வது போர் விமானப்படை தளமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. இதன்படி தஞ்சை விமானப்படை தளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட சுகோய் 30 ரக போர் விமானங்களும் நிறுத்தப்படும் நிலைக்கு தஞ்சை விமானப்படை தளம் தரம் உயர்த்தப்பட்டது.



இதை இன்று இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி பிபின் ராவத் நாட்டுக்கு அர்ப்ப்பணித்தார். பின்னர் பிபின் ராவத் மற்றும் விமானப்படை தளபதி பதோரியா ஆகியோர் வினமாப்படை வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்டனர்.

விமானப்படை தளத்தில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களின் மெய்சிலிர்க்கும் சாகசங்களை தளபதிகள் பார்வையிட்டனர்.

.

மூலக்கதை