தமிழக அரசு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் விருதாளர்களின் எண்ணிக்கை 5ல் இருந்து 72ஆக உயர்த்தப்பட்டுள்ளது: முதல்வர் எடப்பாடி பெருமிதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழக அரசு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் விருதாளர்களின் எண்ணிக்கை 5ல் இருந்து 72ஆக உயர்த்தப்பட்டுள்ளது: முதல்வர் எடப்பாடி பெருமிதம்

சென்னை: தமிழக அரசு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் 5ஆக இருந்த  விருதாளர்களின் எண்ணிக்கை, தற்போது 72ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி கூறினார். திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா இன்று காலை சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் முன்னிலை வகித்தார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஊரக தொழில் துறை அமைச்சர் பென்ஜமின் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கி
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: உயிரினங்களில் மொழி பேசும் வாய்ப்பு பெற்றது மனிதகுலம் மட்டும் தான்.

ஒவ்வொருவரது உள்ளத்திலும் ஊற்றெடுக்கும் எண்ணங்களை பிறரிடம் வெளிப்படுத்தி மொழிவதால் ‘மொழி’ என்னும் பெயர் வழங்கப்பெற்றது.

உலகெங்கிலும் பரவியுள்ள மனிதகுலம், சுமார் ஏழாயிரம் மொழிகள் பேசுவதாக, மொழி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.   இவற்றில் எழுத்து வடிவம் பெற்ற மொழிகள் குறைந்த அளவிலேயே உள்ளன.

உலகிலுள்ள தொன்மையான மொழிகளில் ஏட்டளவிலும், பேச்சளவிலும் இன்றைக்கும் நிலைத்து வாழும் மொழி தமிழ் மொழி. இத்தகைய பெருமை வாய்ந்த தமிழ் மொழியின் தலை சிறந்த நூலான திருக்குறளை உலகுக்கு அருளியவர் தெய்வப் புலவர் என்று அனைவராலும் அழைக்கப்படும் திருவள்ளுவர்.

இன்று உலகில்  அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட  நூல்களில் திருக்குறளும் ஒன்று என்று சொன்னால் அது மிகையாகாது. திருவள்ளுவரின் பெருமையினை உலகறிய செய்யும் வகையில், ஆண்டுதோறும் தைத்திங்கள் 2ம் நாளை திருவள்ளுவர் தினமாக தமிழ்நாடு அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது.



அண்ணா இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டையும், எம்ஜிஆர் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டையும், ஜெயலலிதா எட்டாவது உலக தமிழ் மாநாட்டையும் நடத்தி தமிழுக்கு பெருமை சேர்த்தார்கள். தமிழில் உள்ள அனைத்துச் சொற்களையும் ஒரே தளத்தில் நிரல்படுத்தி வழங்குவதற்காக பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்களின் ஆலோசனைகளை பெற்று சொற்குவை திட்டம் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 10 கோடி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் பங்கு தொகையாக ரூ. 1 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் அறிஞர்களை பெருமைப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விருதுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வந்துள்ளது.

அந்த வகையில், தமிழ் வளர்ச்சி துறையில், 5ஆக இருந்த விருதாளர்களின் எண்ணிக்கை, தற்போது 72ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று விருதுகள் பெற்ற தமிழ் அறிஞர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர், எம்பி, எம்எல்ஏக்கள், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலாளர் மகேசன் காசிராஜன் நன்றி கூறினார்.

.

மூலக்கதை