மசூதி மீது டிரோன் தாக்குதல்: ஏமன் வீரர்கள் உட்பட 100 பேர் பலி.. கிளர்ச்சியாளர்கள் வெறிச்செயல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மசூதி மீது டிரோன் தாக்குதல்: ஏமன் வீரர்கள் உட்பட 100 பேர் பலி.. கிளர்ச்சியாளர்கள் வெறிச்செயல்

துபாய்: ஏமனில் உள்ள மசூதி மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய டிரோன் தாக்குதலில் வீரர்கள் உட்பட 100 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக அங்கீகாரம்பெற்ற ஈரான் ஆதரவு ஹுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 2014ம் ஆண்டு போராட்டம் நடத்தி, சனா நகரை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.   தொடர்ந்து அரசுக்கு எதிரான போரில் பலர் கொல்லப்பட்டு, பலர் தங்களது வீடுகளை விட்டு இடம் பெயர்ந்து சென்றனர்.

கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்துவதற்காக சவுதி தலைமையிலான கூட்டணி படைகள், ஏமன் அரசுக்கு ஆதரவாக பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த சில மாதங்களாக ஹுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுக்கு இடையே அமைதியான சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில் தலைநகர் சனாவில் இருந்து கிழக்கே 170 கி. மீட்டர்கள் தொலைவில் மத்திய மாரீப் மாகாணத்தில் அமைந்த ராணுவ முகாமில் உள்ள மசூதியில் மாலைநேர பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது, மசூதி மீது ஹுதி கிளர்ச்சியாளர்கள் திடீரென ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானம் வழியே தாக்குதல் நடத்தியதில் 100 பேர் வரை கொல்லப்பட்டனர்.   148 பேர் காயமடைந்தனர்.   இதில், 80 ஏமன் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘மசூதி மீது ஹுதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இச்சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்’ என்று தெரிவித்துள்ளார்.இருந்தபோதும், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஹுதி கிளர்ச்சியாளர்கள் உடனடியாக பொறுப்பேதும் ஏற்கவில்லை. இந்நிலையில், சவூதிக்குச் சொந்தமான அல்-ஹதத் தொலைக்காட்சி ஒரு வீடியோவை ஒளிபரப்பியது.

அது தாக்குதலின் பின்னர் நடந்த கொடூரமானதைக் காட்டியது. துண்டாக்கப்பட்ட குப்பைகள் மத்தியில் உடல் பாகங்கள் தரையில் சிதறிக் காணப்படுகின்றன.

மசூதி மீதான கோழைத்தனமான மற்றும் பயங்கரவாத  ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை ஏமன் ஜனாதிபதி அபேத்ராபோ மன்சூர் ஹாடி கண்டித்துள்ளார்.

.

மூலக்கதை