3 தலைநகர் விவகாரத்தில் எதிர்கட்சிகள் போராட்டம்: ஆந்திராவில் பதட்டம்.. விஜயவாடா, குண்டூரில் 144 தடை உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
3 தலைநகர் விவகாரத்தில் எதிர்கட்சிகள் போராட்டம்: ஆந்திராவில் பதட்டம்.. விஜயவாடா, குண்டூரில் 144 தடை உத்தரவு

விஜயவாடா: ஆந்திர சட்டமன்றம் இன்றும் கூடும் நிலையில், ‘சலோ சட்டமன்றம்’, ‘ஜெயில் பரோ’, ‘ராஸ்தா ரோகோ’ என்ற கோஷங்களுடன் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தொடங்கி உள்ளன. முன்னதாக, விஜயவாடா மற்றும் குண்டூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஆந்திராவில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநில சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில் அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த மாநிலத்திற்கு  3 தலைநகரங்களை அமைக்க உள்ளதாகவும், விசாப்பட்டினத்தை நிர்வாக தலைநகராகவும், அமராவதி சட்டமன்ற தலைநகராகவும், கர்னூல் நீதிமன்ற தலைநகராக அமைக்க உள்ளதாக ஏற்கனவே அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார்.

இது  தொடர்பாக இன்றைய கூட்டத்தொடரில் முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்ற உள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால், சட்டப்பேரவை வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



முன்னதாக, சட்டமன்றத்தை முற்றுகையிட எதிர்க்கட்சித் தலைவர்களும், அமராவதி பரிக்ஷனா கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜேஏசி) தலைவர்களும் அழைப்பு விடுத்ததன் அடிப்படையில், மாநில காவல்துறையினர் விஜயவாடா மற்றும் சில நகரங்களில் 3,000 போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது அமைச்சரவைக் கூட்டம் மற்றும் சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது, எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, குண்டூர் காவல்துறையினர், அப்பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, சிஆர்பிசி பிரிவு 144 மற்றும் போலீஸ் சட்டத்தின் பிரிவு 30ன் கீழ் தடை உத்தரவுகள் அமலில் உள்ளதால் சட்டசபைக்கு செல்லும் சாலையில் எந்தவொரு போராட்டத்தையும் நடத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.



போராட்டக்காரர்கள் மற்றும் தலைவர்கள் சட்டசபைக்கு வருவதைத் தடுக்கும் பொருட்டு, பிரகாசம் பேரேஜ், பென்ஸ் வட்டம், கிருஷ்ணா லங்காவில் வரதி சந்தி, ததேப்பள்ளி, உண்டவள்ளி, மங்களகிரி மற்றும் அடையாளம் காணப்பட்ட பிற முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் 3 தலைநகர் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘சலோ சட்டமன்றம்’, ‘ஜெயில் பரோ’, ‘ராஸ்தா ரோகோ’ (சட்டமன்றத்திற்கு செல்வோம், ஜெயிலை நிரப்புவோம், சாலையை மறிப்போம்) ஆகிய கோஷங்கள் எழுப்பட்டு வருகின்றன.

விஜயவாடா போலீசார், போராட்டக்காரர்கள் நுழைவதை தடுக்க போக்குவரத்தை திசை திருப்பி உள்ளனர். இதுகுறித்து, விஜயவாடா நகர போலீஸ் கமிஷனர் துவாரகா திருமலை ராவ் கூறுகையில், ‘அமராவதி பரிக்ஷனா கூட்டு நடவடிக்கைக் குழு அழைத்த போராட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம்.



சிஆர்பிசி பிரிவு 144 மற்றும் போலீஸ் சட்டத்தின் பிரிவு 30ன் கீழ் தடை உத்தரவுகள் அமலில் உள்ளதால் இடையூறுகளை ஏற்படுத்தும் எதிர்ப்பாளர்கள் காவலில் வைக்கப்படுவர்’ என்று எச்சரித்தார்.

3 தலைநகர் விவகாரம் தொடர்பாக, ஆந்திராவில் எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருவதால், இன்றைய சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு முன்னதாக விஜயவாடா, குண்டூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதட்டமான சூழ்நிைல நிலவி வருகிறது.

.

மூலக்கதை