பிரச்சனைகளை ஆக்கப்பூர்வமாக அணுகக்கூடிய மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்: மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது பிரதமர் மோடி பேச்சு

தினகரன்  தினகரன்
பிரச்சனைகளை ஆக்கப்பூர்வமாக அணுகக்கூடிய மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்: மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி டெல்லியில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். டெல்லி தல்கதோரா உள்அரங்கத்தில் நடந்து வரும் நிகழ்ச்சியில் அனைத்து மாநில மாணவர்களும் பங்கேற்று உள்ளனர். நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அவர் பேசியதாவது;  ஹேக்கத்தான் போன்ற போட்டிகளில் கலந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். அதில், இளைஞர்களின் உண்மையான திறமை தெரியவரும். உங்களுடைய இதயத்தை தொட்ட நிகழ்ச்சி எதுவென்று யாரேனும் கேட்டால் இந்த நிகழ்ச்சியை சொல்வேன்.மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிகளில், கற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பை இளம் வயதினர் எனக்கு கொடுக்கிறார்கள். நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 66 மாணவர்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள 2,000 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.  பிரச்சனைகளை ஆக்கப்பூர்வமாக அணுகக்கூடிய மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்.  அவநம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய சூழல்களை அனைவருமே சந்திக்கின்றனர். சில வேளைகளில் தோல்வியும் கூட மிகப்பெரும் படிப்பினையாக அமைவது உண்டு. சந்திராயன் செயற்கைக்கோளை ஏவியபோது விஞ்ஞானிகள் பதற்றத்துடன் இருந்ததை பார்த்தேன்.  பொதுத்தேர்வுக்கு உங்களை தயார்படுத்த உங்கள் பெற்றோர்கள் அதிக நேரம் செலவிடுகின்றனர். தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளுங்கள். மாணவர்களிடம் உரையாற்றியபின் மோடி, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார். கடந்தாண்டு மாணவர்கள் எழுப்பிய சிறந்த பத்து கேள்விகளுக்கு பிரதமர் பதிலளித்தார். நாட்டில் மற்ற பள்ளிகளில் மாணவர்களுக்கு பிரத்யேக திரை அமைக்கப்பட்டு வீடியோ மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடல் திரையிடப்படுகிறது. இந்த வருடம் இந்நிகழ்ச்சி ஜனவரி 16ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், அன்று நாடு முழுவதும் பண்டிகை தினம் என்பதால் நிகழ்ச்சி இன்று ஒத்திவைக்கப்பட்டது. பொங்கல் பண்டிகை அன்று மாணவர்களை பள்ளிக்கு வரச்சொல்லாமா என 16ஆம் தேதி நிகழ்வுக்கு தமிழ்நாட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை