திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச லட்டு

தினகரன்  தினகரன்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச லட்டு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு நாளை முதல் ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது. இலவச தரிசனம், திவ்ய தரிசனம், சர்வ தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு சலுகை விலையில் 4 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மலைப்பாதையில் பாதயாத்திரையாக வந்த பக்தர்களுக்கு மட்டும் ஒரு இலவச லட்டு வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில் அனைத்து பக்தர்களுக்கு ஒரு இலவச லட்டு வழங்கும் திட்டம் நாளை முதல் தொடங்கப்படுகிறது.இதுகுறித்து கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி இன்று நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தினந்தோறும் 25 கிராம் எடை கொண்ட சிறிய லட்டு அல்லது சர்க்கரைப் பொங்கல், புளியோதரை போன்ற அன்ன பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மலைப்பாதையில் பாதயாத்திரையாக நடந்து வந்து திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு 175 கிராம் எடையுள்ள ரூ.40 மதிப்புள்ள ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.அதன்படி தினமும் 20 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 28ம் தேதி நடந்த அறங்காவலர் குழு கூட்டத்தில், சுவாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.சாதாரண நாட்களில் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்களும், சனி, ஞாயிறு மற்றும் உற்சவ நாட்களில் ஒரு லட்சம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு இலவச தரிசனம், சர்வ தரிசனம், திவ்யதரிசனம், ஆர்ஜித சேவா டிக்கெட் பெற்றவர்களுக்கான தரிசனம், விஐபி தரிசனம் என அனைத்து விதத்திலும் சுவாமி தரிசனம் செய்யக்கூடிய அனைத்து பக்தர்களுக்கும் நாளை முதல் 175 கிராம் எடை கொண்ட ரூ.40 மதிப்புள்ள லட்டு இலவசமாக வழங்கப்படும். கூடுதலாக லட்டு தேவைப்படும் பக்தர்கள் கோயிலுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள கவுன்டரில் ரூ.50 செலுத்தி எத்தனை லட்டு வேண்டுமென்றாலும் பெற்றுக்கொள்ளலாம்.இதற்காக ஏற்கனவே நான்கு கூடுதல் லட்டு விற்பனை மையம் இருந்த நிலையில் தற்போது 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தினமும் 4 லட்சம் லட்டுகள் உற்பத்தி செய்து பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை