சர்ச்சையில் சிக்கிய, 'சைக்கோ'

தினமலர்  தினமலர்
சர்ச்சையில் சிக்கிய, சைக்கோ

டபுள் மீனிங் புரொடக் ஷன்ஸ் தயாரிக்க, மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் சைக்கோ படம், விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், தயாரிப்பாளர் ஆர்.ரகுநந்தன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில், 'என் மகன் மைத்ரேயாவை வைத்து படம் எடுப்பதாக பணம் வாங்கிய மிஷ்கின், அந்த கதையை உதயநிதியை வைத்து படமாக்கினார். வாங்கிய, 1 கோடி ரூபாயில், 50 லட்சம் ரூபாயை, இன்னும் அவர் திருப்பி தரவில்லை' என, வழக்கு தொடுத்தார்.நீதிமன்றம், சைக்கோ படத்துக்காக மிஷ்கினுக்கு அளிக்கும் சம்பளத்தில், 50 லட்சம் ரூபாயை, நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட்டது.

இது குறித்து செய்தி வெளியான நிலையில், சைக்கோ படத் தயாரிப்பாளர்களின் சட்ட ஆலோசகர்கள், 'உயர் நீதிமன்றத்திடம் இருந்து, அப்படி எந்த உத்தரவையும் பெறவில்லை; இது போன்ற தகவல்களை வெளியிட்டால், சட்ட நடவடிக்கை எடுப்போம்' என அறிவித்தனர்.

இது குறித்து மைத்ரேயாவிடம் கேட்டபோது, ''நீதிமன்றம் அப்படி உத்தரவிட்டுள்ளது உண்மையே,'' என்றார்.மிஷ்கின் கருத்தை அறிய தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்புகளை ஏற்கவில்லை.

மூலக்கதை