விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளை சீரமைக்க ஆய்வு

தினகரன்  தினகரன்
விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளை சீரமைக்க ஆய்வு

* 2022க்குள் புது நாடாளுமன்ற கட்டிடம் * 1,350 எம்பிக்கள் அமர இருக்கை வசதி புதுடெல்லி: வருகிற 2022ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில், கூட்டு அமர்வின்போது 1,350 எம்பிக்கள் அமரும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்படுகின்றன. மேலும், முன்னாள் ஜனாதிபதியின், ’எம்பிக்கள் எண்ணிக்கையை இரட்டிப்பு ஆக்க வேண்டும்’ என்ற கோரிக்கையின் அடிப்படையில், விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளை சீரமைக்க மத்திய அரசு ஆய்வு நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1912-13ம் ஆண்டில் கட்டிடக் கலைஞர்களான எட்வின் லத்தியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால், நாடாளுமன்ற கட்டிடம் வடிவமைக்கப்பட்டது. இக்கட்டிடம், இந்தியாவின் பழமையான பாரம்பரிய தளங்களில் ஒன்றான  சவுசாத் யோகினி கோயிலை அடிப்படையாகக் கொண்டது. கிட்டத்தட்ட 92 ஆண்டுகள் பழமையானது. இக்கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்ய வேண்டும் எனவும் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் எனவும் இருவேறு கருத்துகள் கூறப்பட்டன.இந்நிலையில், ஆக.2019ல், மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவை தலைவரும் நாடாளுமன்ற கட்டிடத்தை விரிவுபடுத்தவும், நவீனமயமாக்கவும் மத்திய அரசை வலியுறுத்தினர். அதையடுத்து புதிய நாடாளுமன்றத்தை 2022ம் ஆண்டுக்குள் கட்டி முடித்து, அந்த ஆண்டில் நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டிடத்தில் தொழில்நுட்பரீதியாக பல்வேறு வசதிகள் அளிக்கவும், எம்பிக்கள் தங்கள் இருக்கையில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், ஹைடெக் நாடாளுமன்றம் அமைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன. புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தொடர்பாக 5 கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒப்பந்தப்புள்ளி பெற்றது. ஆனால், இத்திட்டத்தின் மதிப்பீடு குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து கட்டுமான பணிகள் தொடங்கி உள்ள நிலையில் இந்தாண்டின் முதல் பாதியில் புதிய நாடாளுமன்றம் வளாகம் தயாராகும் என்கின்றனர். இந்த புதிய மக்களவை மத்திய மண்டபம் 900 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பிக்கள்) அமரக்கூடிய வகையிலும் கூட்டு நாடாளுமன்ற அமர்வின்போது 1,350 எம்பிக்கள் வரை அமர போதுமானதாகவும் வடிவமைக்கப்பட உள்ளது. தற்போது மக்களவையில் 545 எம்.பி.க்களுக்கான இருக்கையில், மாநிலங்களவையில் 250 எம்.பி.க்களுக்கான இருக்கையும் உள்ளன.புதிய நாடாளுமன்ற கட்டிடம் முக்கோண வடிவத்தில் அமைகிறது. எம்பிக்கள் பரந்த இரு இருக்கைகள் கொண்ட பெஞ்சுகளில் வசதியாக உட்கார்ந்துக் கொள்ளலாம். இருபுறமும் எழுந்து செல்ல வசதிகள் உள்ளன. இதனால் யாரும் எவரையும் கசக்கிக் கொண்டு செல்ல வேண்டியதில்லை. அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்ட எச்.சி.பி டிசைன் வழங்கிய வடிவமைப்பு வரைபடத்தின்படி, புதிய முக்கோண நாடாளுமன்ற கட்டிடம் அமையும். இதற்காக இந்திரா காந்தி தேசிய கலை மையம், அது அமைந்துள்ள சில புதிய அரசு கட்டிடங்களுடன் இடமாற்றம் செய்யப்படும். தேசிய காப்பகங்கள் மறுவடிவமைக்கப்படும். பிரதமரின் குடியிருப்பு தற்போதுள்ள தெற்கு தொகுதி வளாகத்தின் பின்னால் மாற்றப்படும். அதே நேரத்தில் துணை ஜனாதிபதியின் குடியிருப்பு வடக்கு தொகுதிக்கு பின்னால் செல்லவுள்ளது. கிட்டத்தட்ட 13 ஏக்கரில் உள்ள நாடாளுமன்ற வளாகம் மேலும், முந்தைய சபையை விட மிகப் பெரியதாக இருக்கும். முன்னதாக, அரசியல் ஆய்வாளர்கள் மிலன் வைஷ்ணவ் மற்றும் ஜேமி ஹிண்ட்சன் ஆகியோர் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, ‘2026ம் ஆண்டில் மக்களவையின் அளவு குறித்த முடிவை இந்தியா மறுபரிசீலனை செய்யும். 2026ம் ஆண்டுக்குள் மக்களவையில் 848 உறுப்பினர்கள் இருப்பார்கள்’ என்று கணித்தனர். அதன்படியே, விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில், புதிய வளாகம் 900 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் வகையில் கட்டப்படுகிறது. ஏற்கனவே, 2019 டிசம்பரில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மக்களவையின் பலத்தை தற்போதைய 545 என்ற எண்ணிக்கையில் இருந்து, 1,000 உறுப்பினர்களாக இரட்டிப்பாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, தொகுதிகளை சீரமைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு ஆய்வு நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

மூலக்கதை