பாஜ தேசிய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: இன்று முறைப்படி வேட்புமனு

தினகரன்  தினகரன்
பாஜ தேசிய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: இன்று முறைப்படி வேட்புமனு

புதுடெல்லி: பாஜ தேசிய தலைவராக தற்பாதைய செயல்தலைவராக உள்ள ஜே.பி.நட்டா ஏகமனதாக தேர்வு செய்யப்படவுள்ளார்.  கடந்த 2014ம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்று, பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்பு, பாஜ.வின் தலைவராக அமித்ஷா தேர்வு செய்யப்பட்டார். இவர் தலைமையில் பாஜ. அடுத்தடுத்து பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று, பிரதமராக மோடி 2வது முறை பொறுப்பேற்றதும் தனது அமைச்சரவையில் 2வது இடமான உள்துறை அமைச்சர் பதவியை அமித்ஷாவுக்கு வழங்கினார். இந்நிலையில், பாஜ விதிகளின்படி ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் கட்சித் தலைவர் பதவியை அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால், அவரது பதவிக்காலம் கடந்த டிசம்பருடன் முடிவடைய இருந்ததால், அதுவரை அவர் தொடரலாம் என அப்போது முடிவெடுக்கப்பட்டது. இதற்கிடையே, பாஜ.வில் புதிதாக செயல் தலைவர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, அதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டார். அவர் தற்போது அந்த பதவியில் உள்ளார். இதற்கிடையே, பாஜ தேசிய தலைவர் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. போட்டியிட விரும்புபவர்கள் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஆனால், ஜே.பி.நட்டாவை தவிர வேறு யாரும் மனுத்தாக்கல் செய்ய மாட்டார்கள் என்றும், அவரே அடுத்த தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்றும் பாஜ மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். நட்டாவின் வேட்புமனுவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் இருந்து  மத்திய, மாநில அமைச்சர்கள் உட்பட கட்சி தலைவர்கள் பாஜ  தலைமையகத்திற்கு வந்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் பிறந்த ஜே.பி.நட்டா, அந்த மாநில சட்டப்பேரவைக்கு 1993, 1998 தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின், மாநிலங்களவைக்கு தேர்வானார். கடந்த முறை பிரதமர் மோடி அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார். தற்போது அமைச்சர் பதவியில் இல்லாத அவர் கட்சியின் தேசிய தலைவராக பதவியேற்க உள்ளார். தமிழக பாஜ தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மாநில கவர்னராக பதவியேற்றார். இதையடுத்து தமிழக பாஜ தலைவர் பதவி காலியாக உள்ளது. புதிய தலைவர் அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை