ரஞ்சி கோப்பை லீக் ஆட்டம் தமிழகம்-ரயில்வே மோதல்

தினகரன்  தினகரன்
ரஞ்சி கோப்பை லீக் ஆட்டம் தமிழகம்ரயில்வே மோதல்

சென்னை: ரஞ்சி கோப்பை தொடரில் தமிழ்நாடு-ரயில்வே அணிகள் மோதும் எலைட் பி பிரிவு லீக் ஆட்டம் சென்னையில் இன்று தொடங்குகிறது.நடப்பு சீசனில் தமிழக அணி இதுவரை 5 லீக் போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை கூடப் பெறவில்லை. விளையாடிய 5 போட்டிகளில் 3ல் டிரா, 2ல் தோல்வி கண்டுள்ளது.  காயத்தால் விலகியிருந்த தினேஷ் கார்த்திக், அபினவ் முகுந்த், அஸ்வின்  ஆகியோர் அணிக்கு திரும்பியும் டிரா மட்டுமே சாத்தியமாகி உள்ளது. ஒரு போட்டியில் நன்றாக விளையாடும் தமிழக வீரர்கள், அடுத்த போட்டியில் சொதப்புவது வாடிக்கையாக இருக்கிறது. அதனால் தமிழகத்துக்கு வெற்றி எட்டாக் கனியாக இருக்கிறது. அதுமட்டுமல்ல... அரையிறுதிக்கான வாய்ப்பும் குறைந்து வருகிறது. இன்னும் 3 போட்டிகளில் மட்டுமே தமிழ்நாடு விளையாட வேண்டி உள்ளது. அந்த போட்டிகளில் அபார வெற்றி பெற்றால் மட்டுமே  அரையிறுதி சாத்தியமாகும்.இன்று தமிழ்நாடு அணியுடன் மோத உள்ள ரயில்வே அணியின் நிலைமையும் அதேதான். ஆனால் அந்த அணி வெற்றியை ருசித்திருப்பது அந்த அணியின் பலம். ரயில்வே இதுவரை 5 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்விகளை சந்திருக்கிறது. நடப்புத் தொடரில் தமிழ்நாடு அணியை விட ரயில்வே அணி வலுவான அணியாகவே இருக்கிறது. அந்த அணியும் எஞ்சிய 3 போட்டிகளில் புள்ளிகளை குவிப்பது பொறுத்தே அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும்.இந்த 2 அணிகளும் அரையிறுதி கனவை தக்க வைத்துக்கொள்ள இந்தப் போட்டியில் அபார வெற்றி பெற வேண்டியது அவசியம். அதனால் வெற்றிக்கு 2 அணிகளும் மல்லுக்கட்டும். ரஞ்சித் தொடரில் இந்த 2 அணிகளும் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 2 போட்டிகளில் தமிழ்நாடு வென்றுள்ள நிலையில், 3 போட்டிகள் டிரா ஆகியுள்ளன.

மூலக்கதை